ஆசிரியை மகேஸ்வரி பணியிடை நீக்கம்: ` எதேச்சதிகாரப்போக்கின் உச்சம்!' – சீமான் கண்டனம்

65cbe40b3e95e.jpg

“பள்ளிக்கல்வித்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், புதிய கல்விக்கொள்கையின் குறைபாடுகள் குறித்தும் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்த கல்விச் செயல்பாட்டாளரும், அரசுப்பள்ளி ஆசிரியருமான உமாமகேசுவரியை, திமுக அரசுப் பணியிடை நீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கையை விமர்சித்தார் என்பதற்காக கொடுங்குற்றம் புரிந்த கைதியைப்போல, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அலைபேசியைப் பறித்து வைத்துக்கொண்டு, ஆசிரியர் சு.உமாமகேசுவரியை மிரட்டியுள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

தேசிய கல்விக் கொள்கையை முன்னிலைப்படுத்தி, அதனைத்தழுவியே தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படுவதைக் கண்டித்த பேராசிரியர் ஜவகர் நேசன் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் அரசின் மாநில உயர்நிலைக் கல்வி குழுவிலிருந்து தானாக விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆசிரியை மகேஸ்வரி

அதனைத் தொடர்ந்து, கல்விச்சிக்கல் தொடர்பாகவும், பள்ளிக்கல்வித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் தமது அறிவார்ந்த சீர்திருத்தக் கருத்துகளைத் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக முன்வைத்து வந்த ஆசிரியர் உமாமகேசுவரி அவர்களை, ‘அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு அரசையே விமர்சிப்பாயா? தேசிய கல்விக் கொள்கையைத் தவறு என எப்படிக் கூறலாம்?’ என்ற தொனியில் மிரட்டி, சட்டத்திற்குப் புறம்பாக திமுக அரசு தற்போது பணியிடை நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.

திமுக அரசை யாருமே விமர்சிக்கக் கூடாதா? அதன் தவறான செயல்பாடுகளை எதிர்த்து யாரும் கேள்வியே எழுப்பக் கூடாதா? அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுவோரைப் பதவியிலிருந்து அகற்றித் தண்டிப்பதுதான் சமூகநீதி போற்றும் திராவிட மாடலா? இதற்குப் பெயர்தான் கருத்துச் சுதந்திரமா? பாஜக அரசு வர்ணாசிரம அடிப்படையில் கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த திமுக அரசு துடிப்பதேன்? அதனை எதிர்க்கும் கல்வியாளர்களை கடுமையாகத் தண்டிப்பது ஏன்?

சீமான்

பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களையும், அதன் மனுவாத சட்டங்களையும் கடுமையாக எதிர்ப்பதாக திமுக அரசு கூறுவதெல்லாம் வெற்று ஏமாற்று அரசியல் நாடகம் என்பதற்கு ஆசிரியர் உமாமகேசுவரி மீதான பணியிடை நீக்க நடவடிக்கை மற்றுமொரு சான்றாகும்.

ஆகவே, சட்டத்திற்குப் புறம்பாக ஆசிரியர் உமா மகேசுவரி மீது எடுக்கப்பட்டுள்ள பணியிடை நீக்க நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்து, அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *