விவசாயிகள் போராட்டம்: `குழந்தைகளை கேடயமாகப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது!' – நீதிமன்றம் அதிருப்தி

65cfd6d24d0fd.jpg

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள், பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘டெல்லி சலோ’ போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். பஞ்சாப் – ஹரியானா இடையேயான ஷம்பு, கானௌரி எல்லைப் பகுதியில் தொடர்ந்து போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, சாலையில் ஆணி, கண்ணீர்ப் புகைக்குண்டு, ரப்பர் குண்டுத் தாக்குதல், லத்தி சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை அரசு கையாண்டும் போராட்டம் கட்டுப்பட்டப்பாடில்லை.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 அன்று போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பதிண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். விவசாயிகள் போராட்டம், விவசாயி பலி உள்ளிட்ட பொது மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று ஹரியானா – பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து நீதிமன்ற அமர்வு, “பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.

வெளிப்படைத்தன்மைக்கான காரணங்களுக்காக விசாரணையை பஞ்சாப் அல்லது ஹரியானா அரசுகளிடம் ஒப்படைக்க முடியாது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும். ஏ.டி.ஜி.பி அதிகாரியின் பெயர்களை மாலை 4 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என இரு மாநில அரசுக்கும் உத்தரவிடப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் குழந்தைகள் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டது முற்றிலும் வெட்கக்கேடானது!

Farmers Protest | விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டம்

பள்ளியில் படிக்க வேண்டிய குழந்தைகளுக்கு அவர்கள் இருக்கக்கூடாத இடத்தைக் காட்டுகிறார்கள்… இது ஒரு போர் போன்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டக்காரர்கள் மீது ஹரியானா காவல்துறை எந்த வகையான தோட்டாக்கள் மற்றும் பெல்லட்டுகளைப் பயன்படுத்தியது என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். விவசாயிகளுக்குப் போராட்டம் நடத்த உரிமை உண்டு, ஆனால் அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. விவசாயிகள் போராட்டத்திற்காக டிராக்டர்கள் போன்ற வண்டிகளில் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, நெடுஞ்சாலையில் டிராக்டர்கள் போன்ற வாகனங்களை பயன்படுத்த முடியாது… அமிர்தசரஸிலிருந்து டெல்லிக்கு டிராக்டர்கள் போன்ற வண்டிகளில் பயணம் செய்கிறீர்கள்… அந்த சாலையில் பயணிக்க அனைத்து பொதுமக்களுக்கும் உரிமை இருக்கிறது. அரசுக்கு அரசியலமைப்பு கடமைகளும் இருக்கின்றன என்பதை நினைவில் நிறுத்துங்கள்” எனக் குறிப்பிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *