அமைச்சர் உதவியாளருக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர்; விதிகள் மீறப்பட்டதா?- விளக்கம் கேட்கும் நீதிமன்றம்!

Img 20190726 Wa0034 1 .jpg

அமைச்சர் பெரியகருப்பனின் உதவியாளருக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கப்பட்டதில் விதிமீறல் நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அரசு தரப்பிடம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விளக்கம் கேட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிவகங்கை மாவட்டத்தில் சாலைகளைப் பலப்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் திட்டத்தின்கீழ் கீழையூர்- தாயமங்கலம், சாலைக்கிராமம்- சருகுணி சாலையைப் பலப்படுத்த 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கான இயந்திரங்களை சொந்தமாக வைத்திருப்பதற்கான ஆவணங்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பொறியாளரிடம் உரிய சான்றுகள் பெற்று, அதனை பிப்ரவரி 26-ம் தேதி மாலை 4 மணிக்குள் ஆன்லைன் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில்  அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலை ஒப்பந்ததாரரான நான், டெண்டருக்கான விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களோடு விண்ணப்பம் செய்தேன். ஆனால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் உதவியாளர் இளங்கோவிற்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அரசியல் தலையீடு உள்ளது. உரிய சான்றிதழ்களோடு டெண்டருக்கு முறையாக விண்ணப்பம் செய்தும் எந்தவித காரணமுமின்றி என்னை நிராகரித்துள்ளனர்.

பெரியகருப்பன்

சாலைப்பணியை தனது உதவியாளர் மூலம் மேற்கொள்ள வேண்டுமென்று அமைச்சர் பெரியகருப்பன் முயல்கிறார். அமைச்சரின் உதவியாளரான இளங்கோ, அரசிடம் சம்பளம் பெறுகிறார். டெண்டரில் போலியான ஆவணங்களை சமர்பித்துள்ளார். எனவே சாலை பலப்படுத்துதல் பணிக்கான டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் அறிவிப்பு செய்து முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்ட இளங்கோ, சாலைப்பணிகளை மேற்கொள்வதற்கான இயந்திரங்களைச் சொந்தமாக வைத்துள்ளாரா…  டெண்டருக்கான விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை ஆன்லைன் மூலமாக முறையாக பதிவேற்றம் செய்துள்ளரா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, “இதற்கான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு வழக்காக விசாரணைக்கு எடுக்கப்படும்” எனக் கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

கடந்த 2006-ம் ஆண்டில் அமைச்சராக பெரியகருப்பன் பொறுப்பேற்றபோதும், தற்போதும் அவரின் தனி உதவியாளராக இளங்கோ இருந்து வரும் நிலையில், அரசு டெண்டர் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது விதிமீறல் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *