`மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடக்கம் வெறும் கண்துடைப்பு..!' – அமைச்சர் ரகுபதி தாக்கு

Ragupathi .jpg

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியின் 144-வது ஆண்டு விழா நிகழ்ச்சி, அந்தக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கால்டுவெல் குறித்து ஆளுநர் பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநருக்கு ஒரு டாக்டர் பட்டமும், அறிவியல் ஆராய்ச்சிக்கு பட்டமும் கொடுத்து விடலாம். படித்துதான் ஒருவர் கருத்துகளை எழுத வேண்டும் என்பது இல்லை. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்ன படித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரம், கலைஞர் தொல்காப்பியம் எழுதியதைப்போல் எந்த ஒரு படித்த மேதாவிகளும் எழுதிவிட முடியாது. அந்த அளவுக்கு அதனை எழுதியுள்ளார். ஓர் உரை எழுத வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு அறிவு இருந்தால்போதும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

கல்லூரி படித்துவிட்டுத்தான் எழுத வேண்டும் என்று கிடையாது. இந்த புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்த ஆளுநருக்கு பிஹெச்.டி பட்டம் வேண்டும் என்றால் கொடுப்போம். ஆளுநர் எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டு போகட்டும். தினசரி பேசுபொருளாக, தான் இருக்க வேண்டும் என்பதுதான் ஆளுநரின் லட்சியம். பா.ஜ.க-வும் போய்விட்டது.. அ.தி.மு.க-வும்… போய்விட்டது. இனி, தி.மு.க-வை எதிர்த்து ஏதேனும் கருத்துகள் வர வேண்டும் என்றால், தான் பேசும் பொருளாக இருந்தால்தான் என்ற எண்ணத்தோடு இன்றைக்கு எதிர்க்கட்சியாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ‘தி.மு.க கொள்ளை அடித்து வைத்துள்ள பணத்தை மீட்போம்’ என்று சொல்லும் பிரதமர் மோடி, முதலில் அவர் 10 பணக்காரர்களிடம் கொடுத்து வைத்துள்ள பணத்தை மீட்டு கொண்டு வந்தால், இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கோடீஸ்வரர்களாக மாறிவிடுவார்கள்.

தமிழ்நாட்டைப் பற்றி ஏன் மோடி பேசுகிறார். நாங்கள் எந்த பணத்தையும் கொள்ளையடிக்கவில்லை… எந்த பணமும் எங்களிடம் கிடையாது. முடிந்தால் என்ன வேண்டும் என்றாலும் சோதனை போட்டு பார்த்துக் கொள்ளட்டும். மடியில் கனமில்லை… அதனால் எங்களுக்கு வழியில் பயமில்லை. இந்தியாவில் 10 பணக்காரர்களை மோடி உருவாக்கி வைத்துள்ளார். அவர்களிடம் இருக்கக்கூடிய கோடிகளை எந்தெந்த வகையில் கொடுத்து வைத்திருக்கிறார் என்பது தெரியும். எல்லாரையும் ஏழைகளாக ஆக்கிவிட்டு 10 நபர்களை தான் பணக்காரர்கள் ஆக்கியுள்ளார். அப்படிப்பட்ட அந்த பெரிய மனுஷன் சொல்வதற்கெல்லாம் மக்கள் மதிப்பு கொடுக்க மாட்டார்கள்.

அமைச்சர் ரகுபதி

தேர்தல் அறிவித்துள்ளதால் கண்துடைப்பிற்காக எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தொடங்கியுள்ளனர். அவர்கள் தேர்தலுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். இதுபோன்ற கண் துடைப்புப் பணிகளை செய்வதில் அவர்கள் மிகுந்த கெட்டிக்காரர்கள். தற்போதுகூட உங்கள் வங்கி கணக்கில் ரூ. 25 லட்சம் வரப்போகிறது என்று சொல்வார்கள். ஜூன் மாதம், 1-ம் தேதி வரும் என்று கூறுவார்கள். ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அந்த 25 லட்சம் ரூபாய் பணமும் வராது…அவரும் வரமாட்டார்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *