`திமுக கூட்டணி இருக்கட்டும், நாம் எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம்!’- காங்., MLA-க்கள் பேச்சு | congress mlas speech at vilavangodu party meeting

Img 20240305 133532621.jpg

கன்னியாகுமரி நாடளுமன்ற செயல்வீரர்கள் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் நடந்த அந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ மற்றும் பிரின்ஸ் எம்.எல்.ஏ ஆகியோர் பேசியது அதொர்வலையை ஏற்படுத்தியது. அந்தக் கூட்டத்தில் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸ் பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்டம், காங்கிரஸ் கட்சியின் கோட்டை. அதை காப்பாற்ற வேண்டும். காமராஜர் ஆட்சிக்கு பிறகு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் நாம் மாற்றுக் கட்சியினரோடு கூட்டணி வைத்துதான் ஆட்சி செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் நம்மிடம் அதிகாரம் இல்லை, கன்னியாகுமரி மாவட்டம் ஒதுக்கப்பட்ட மாவட்டமாக இருக்கிறது. தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி அடையவில்லை. காமராஜர் ஆட்சியில் இருந்தபோதுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இங்கு ரப்பர் அதிகமாக விளைகிறது, அதிகமாக மீன் கிடைக்கிறது. அதன்மூலம் நம் மாவட்டத்தில் எத்தனை திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் புறக்கணிக்கப்பட்ட மாவட்டமாக இந்த மாவட்டம் இருக்கிறது. நம்முடைய மாவட்டத்தினுடைய எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. சாலைகள் மிக மோசமாக உள்ளது. மீனவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் மீட்க வசதி இல்லை. நமக்கென்று விமான நிலையம் இல்லை. எந்த விதமான முன்னேற்றங்களும் இல்லை. நான்குவழிச் சாலை ஆரம்பித்து அப்படியே கிடக்கிறது. எந்த பணியும் முடியாமல் கிடைக்கிறது. சாலை போக்குவரத்த்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது.

பிரின்ஸ் எம்.எல்.ஏ பேசியபோது

பிரின்ஸ் எம்.எல்.ஏ பேசியபோது

மோடி ஆட்சியில் நாம் விஞ்ஞானத்தையும், வளர்ச்சியையும் இழந்து விட்டோம். மோசமான ஆட்சியால், மோசமான சட்ட திட்டங்களால் மோடி ஆட்சியில் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இனிமேல் மோடி வந்தால் நாடு நாடாக இருக்காது, ஜனநாயகம் இருக்காது. நாம் இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் நாம் எதிர்காலத்தில் நம் காமராஜர் ஆட்சி அமைப்போம்” என்றார்.

இதில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் பேசுகையில், “கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் மட்டும்தான். மற்ற நேரத்தில் கட்சி வளர்ச்சியைத்தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து 52 ஆண்டுகள் ஆகிறது. கட்சியை வளர்த்த பிறகுதான் நாம் கூட்டணியை பார்க்க வேண்டும். கட்சியை வளர்க்காமல் இருந்தால் நாம் கூட்டணி தேடி போக வேண்டும். கட்சியை வளர்த்தால் அவர்கள் கூட்டணிக்காக நம்மை தேடி வருவார்கள். இந்த கட்சி தான் எனக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை தந்தது. நீங்கள் சிந்திய வியர்வை, நீங்கள் சிந்திய ரத்தம் தான் இந்த ராஜேஷ்குமார். இந்த வேட்டியும், சட்டையும் அணிந்து உங்கள் முன்பு நான் நிற்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். உழைத்த அனைவருக்கும் வாய்ப்பு வரவேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லுவேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *