`ஜி.எஸ்.டி-யை தடை செய்ய தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!' – விக்கிரமராஜா வலியுறுத்தல்

Img 20240305 153955.jpg

தேனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தேனி, திண்டுக்கல், கரூர் மற்றும் பழனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விக்கிரமராஜா

இதில் கலந்துகொண்ட பின்பு, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, “மே 5-ம் தேதி மதுரையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 41-வது மாநில மாநாடு நடக்கவுள்ளது. அந்த மாநாட்டின் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் நிலவும் வாடகை, வரிப் பிரச்னைகளை சீரமைக்க அரசிடம் வலியுறுத்தவிருக்கிறோம்.

வணிக வரித்துறை மூலம் ஜி.எஸ்.டி-யால் வணிகர்கள் நசுக்கப்படுவதைத் தவிர்க்க ஜி.எஸ்.டி-யைத் தடை செய்ய தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து மாநில மாநாட்டில் தேதி அறிவிக்கப்படும்.

ஜிஎஸ்டி | GST

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எங்களிடம் ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஜி.எஸ்.டி வரி விதிப்பை எளிமைப்படுத்தி முறைப்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும்போது வணிகர் பேரவை நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை பெற்று, முறைப்படுத்த வேண்டும். வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதியாகவும், எழுத்துபூர்வமாகவும் தெரிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வரும் எம்.பி தேர்தலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு அளிக்கும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *