நாம் தமிழர் கூட்டத்தில் கல்வீச்சு; பெண் வேட்பாளருக்கு மிரட்டல் – ராணிப்பேட்டை திமுக-மீது புகார்!

Whatsapp Image 2024 03 04 At 4 24 50 Pm.jpeg

நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் அப்ஷியா நஸ்ரின். இவரது அறிமுகக் கூட்டம் நேற்று இரவு ராணிப்பேட்டை அருகேயுள்ள கல்மேல்குப்பம் ஊராட்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான் பேசும்போது, கைத்தறித்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி மற்றும் அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்தும், தி.மு.க பற்றியும் கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று இரவு ஏற்பட்ட சலசலப்பு

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க-வினர் சிலர் கற்களை வாரிக்கொண்டு நாம் தமிழர் கூட்டத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றிருக்கின்றனர். கல்வீசியதில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கல்வீசிய நபர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியிருக்கிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்ஷியா நஸ்ரின் ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அவரது மனுவில், ‘‘கட்சி கரைவேட்டி கட்டிவந்த தி.மு.க-வினர், எங்களை ஒருமையில் திட்டியதோடு, எங்கள் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மானை வெட்டுவதாக கொலை மிரட்டல் விடுத்தனர்.

நாம் தமிழர் கட்சி புகார்

அதோடு, என்னையும், என் கட்சியினரையும் தாக்கி கொல்ல முயன்றனர். நாங்கள் முன்கூட்டியே காவல் நிலையத்தில் அனுமதி பெற்றுதான் இந்தக் கூட்டத்தை நடத்தினோம். சம்பவத்தை அங்கிருந்த காவல்துறையினரும் பார்த்திருக்கிறார்கள். எனவே, மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் பெண் வேட்பாளர் என்பதால், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு எனக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சியினரின் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த ராணிப்பேட்டை போலீஸாருக்கு எஸ்.பி உத்தரவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *