தலைக்கேறிய மது போதை; பள்ளிக்கு விடுமுறை அறிவித்த ஆசிரியர் கைது! – பீகாரில் அதிர்ச்சி | Drunk teacher declares holiday in Bihar

Man 428392 640.jpg

பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் குடிபோதையில், விடுமுறை அறிவித்து அனைத்து மாணவர்களையும் வீட்டிற்கு அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டார்.

இத்தகைய செயலில் ஈடுபட்ட அந்த ஆசிரியரின் பெயர் ரவிசங்கர் பாரதி எனத் தெரியவந்திருக்கிறது. சம்பவ தினத்தன்று, பள்ளிக்கு மது அருந்திவிட்டு வழக்கத்தை விடவும் சீக்கிரமாக வந்திருக்கிறார் ரவிசங்கர். பின்னர் பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரிடமும், `இன்று பள்ளி விடுமுறை. அதனால், நீங்கள் அனைவருக்கும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” எனக் கூறியிருக்கிறார். மாணவர்களும் ஆசிரியரின் பேச்சைக் கேட்டு, வீட்டுக்குத் திரும்பியிருக்கின்றனர். இந்த நிலையில், தங்கள் பிள்ளைகள் வீடு திரும்பியதைக் கண்ட பெற்றோர், அதிர்ச்சியடைந்தனர்.  விடுமுறை அறிவிக்கப்பட்டதை அறிந்த அவர்கள், பள்ளிக்கு விரைந்தனர். அங்கு ஆசிரியர் ரவிசங்கர் பாரதி குடிபோதையில் இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள், பாரதியின் கை, கால்களைக் கட்டி, உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

“ஆசிரியர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது குடிபோதையிலிருந்ததை உறுதி செய்தோம். அதையடுத்து அவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். அங்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது” என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *