'தலைமை சொன்னால் தேர்தலில் போட்டி' – அண்ணாமலையின் கருத்துக்கு பின்னால்..?

Annamalai 113050 16x9.jpg

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல்கள் யூகங்கள் அடிப்படையிலானது. அதுபோல் எனக்கு யாரும் சொல்லவில்லை. கட்சி தலைமை தெரிவித்தால் கட்டுப்பட்டு நடப்பேன். எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. தலைமை என்ன சொன்னாலும் நான் கீழ்ப்படிய வேண்டும், அதுதான் கட்சியின் இயல்பு. 39 தொகுதிகளையும் சமமாக பார்த்துதான் வேலை செய்து இருக்கிறேன். எனக்கு எதையும் கொடுங்கள் என்றும் கேட்கவில்லை. கொடுக்காதீர்கள் என்றும் கேட்கவில்லை. அடுத்த 60 நாள்களுக்கு என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அகில இந்திய தலைமைக்கு தெரியும். குறிப்பாக பிரதமர் மோடிக்கு தெரியும். காமராஜர், ராஜாஜி என எல்லா தலைவர்கள் குறித்தும்தான் மோடி பேசுகிறார். ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்து மட்டும் பேசவில்லை.

உதயநிதி, ஸ்டாலின்

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்துவிட்டது. அதை பொறுத்துக்கொள்ளாமல் சிலர் வயிற்று எரிச்சலில் பேசி வருகிறார்கள். தேர்தல் முடிவு வரும் போது தெரியும். கருணாநிதி, ஸ்டாலின் பெயரை எடுத்துவிட்டால் உதயநிதி இரண்டு ஓட்டுகள் கூட முடியாது. உதயநிதி என்பவர் அவருடைய அப்பா சம்பாதித்த பணத்தில் நடித்த ஒரு தோற்றுப்போன நடிகர். தாத்தா, அப்பா பெயரை பயன்படுத்தி ஒரு எம்எல்ஏ, அமைச்சர் ஆனவர். ஆகவே பிரதமர் மோடியின் கால் நகத்தில் இருக்கும் தூசுக்கு கூட சமம் கிடையாது. எனவே தனது தரத்தை அறிந்து அவர் பேச வேண்டும். மோடியின் தாத்தா குறித்து பேசுவதற்கு உதயநிதி யார்?. தனது தாத்தாவை வைத்து அரசியலுக்கு வந்தவர்.” என கொதித்தார்.

இதையடுத்து தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தெரிவித்து வந்த அண்ணாமலை திடீரென தலைமை அறிவுறித்தினால் களம் காணுவேன் என கூறி இருப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வியுடன் கமலாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “வரும் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி தலைமை தீவிரம் காட்டி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில்தான் முதற்கட்டமாக 195 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ப்ரியன்

அதில், வாராணசி தொகுதியில் மீண்டும் பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷாவும் களமிறங்குகிறார். தமிழகத்தை பொறுத்தவரையில் அண்ணாமலையை முதலில் களமிறக்க வேண்டாம் என்றுதான் தலைமை நினைத்து வந்தது. இருப்பினும் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த பாஜகவின் கூட்டங்களில் அதிக அளவு மக்கள் கலந்துகொண்டனர். மேலும் டெல்லி நடத்திய ரகசிய சர்வேயில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவதற்கான சூழல் நிலவி வருவது தெரியவந்து இருக்கிறது. எனவே அந்த இடங்களில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என கட்சியினரை தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. இதில் ஒரு இடத்தில் அண்ணாமலையை நிறுத்தலாம் என டெல்லி யோசித்து வருகிறது. ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “பாஜக வளர்ந்து இருக்கிறது என்றால் எதற்காக முருகனுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து இருக்கிறார்கள். அண்ணாமலை தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது என கூறுவதால் அவரை வைத்தே பரிசோதிக்க டெல்லி முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மேலும் இந்த தேர்தலில் அண்ணாமலையை களம் இறக்குவதன் மூலம் அவரை தோல்வியடைய செய்து அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டலாம் என அவரது அரசியல் எதிரிகள் திட்டமிடுகிறார்களா என்றும் தெரியவில்லை. எப்படியோ அகில இந்திய தலைமை சொன்னால் அவர் தேர்தலில் நின்றுதான் ஆக வேண்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *