மகாராஷ்டிரா: தொகுதிப் பங்கீடு; உத்தவ் சிவசேனாவின் முடிவில், அம்பேத்கர் பேரன் அதிருப்தி!

Prakash Ambedkar 1708774844.jpg

மகாராஷ்டிராவில் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், வஞ்சித் பகுஜன் அகாடி என்ற கட்சியின் தலைவராக இருக்கிறார். அவரது கட்சியில் ஒவைசியின் கட்சியும் கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறது. தலித் மக்களின் கணிசமாக வாக்கு வங்கி பிரகாஷ் அம்பேத்கருக்கு இருக்கிறது. மகாராஷ்டிராவில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாக்குகளை பிரித்து, காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறவிடாமல் செய்துவிட்டார். தற்போது சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் வஞ்சித் பகுஜன் அகாடி சேர்ந்திருக்கிறது. உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி பிரகாஷ் அம்பேத்கர் தன்னை மகாராஷ்டிராவில் மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் சேர்த்துக்கொண்டார்.

தற்போது மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முழுவேகத்தில் நடந்து வருகிறது. இதில் சிவசேனா 20 தொகுதியிலும், காங்கிரஸ் 18 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. பிரகாஷ் அம்பேத்கர் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த தொகுதிகள் தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றும், கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனால் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பிரகாஷ் அம்பேத்கர் அளித்த பேட்டியில், “எங்களது கட்சி தனித்து போட்டியிட்டால் எங்களால் 6 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். எங்களது கட்சிக்கு அனைத்து தொகுதியிலும் செல்வாக்கு இருக்கிறது. எங்களால் 46 தொகுதியில் தனித்து போட்டியிட முடியும். வேட்பாளர்கள் பெயர்களைக்கூட அறிவிக்க முடியும்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தேர்தலில் 15 சதவிகித இடங்களை மகாவிகாஷ் அகாடி ஒதுக்கவேண்டும். கடைசி வரை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்பேன். அகோலா தொகுதியில் போட்டியிட இருக்கிறேன். சாப்பாடு மற்றும் போக்குவரத்து வசதி செய்து கொடுக்காமல் எங்களது பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகின்றனர்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *