`பிரதமர் மோடி, அளவுக்கு மீறி பொய் சொல்லி வருகிறார்..!' – நாராயணசாமி கடும் விமர்சனம்

Img 20240302 130443.jpg

“10 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் கூற வேண்டும்” என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.

நாராயணசாமி

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒரு பிரதமர், எந்த அளவிற்கு பொய் சொல்ல வேண்டுமோ அந்த அளவை மீறி தற்போது பொய் சொல்லி வருகிறார். குடும்ப அரசியல் நடக்கிறது என்று பிரதமர் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை மற்றும் தூத்துக்குடி பகுதியில் வரலாறு காணாத மழை பெய்தது, மக்கள் அவதிப்பட்டார்கள். மாநில அரசு சார்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் ஒன்றாக இணைந்து நிவாரணப் பணிகளை செய்தனர்.

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்ள அரசு பாதிக்கப்பட்ட பகுதி மக்களை புறக்கணித்தது. பேரிடர் ஏற்பட்டால் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தும் பிரதமர் செவி சாய்க்கவில்லை.

அதே நேரம் தமிழகத்திற்கு நிறைய திட்டங்கள் கொண்டு வந்துள்ளதாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோதும், ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோயில்களுக்கு சென்ற பிரதமர் மக்களை சந்திக்கவில்லை.

10 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் கூற வேண்டும்

கறுப்புப் பணத்தை ஸ்விஸ் வங்கியிலிருந்து மீட்டு ஒவ்வொரு இந்தியர் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்படும் என்று கூறினார். அதனை நிறைவேற்றவில்லை.

விலைவாசி உயர்ந்துள்ளது, வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் கையில் பணம் இல்லை, சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது, மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது, மேலும் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியினரை குறை சொல்வதை மட்டுமே பிரதமர் செய்து கொண்டிருக்கிறார். பிரதமர் ஆக தகுதி இல்லாதவர் மோடி. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் தொடர்ந்து பேசிய பின்புதான் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர், ஆனால், எந்த வேலையும் நடைபெறவில்லை.

புதுச்சேரி மாநிலத்திம் இதே நிலைதான், தமிழகம்போல புதுச்சேரி மாநிலத்திலும் வாக்குறுதியை அள்ளி வீசினார்கள். ஆனால், அதனை நிறைவேற்றவில்லை. இன்று புதுச்சேரியில் சாராய ஆறுதான் ஓடிக்கொண்டிருக்கிறது, சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை தற்போது மோடி செய்ததாக கூறிக் கொண்டிருக்கிறார். மதத்தின் பெயரால் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது.

நாராயணசாமி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிரதமர் வந்தபோது கடைகளை மூடியும், கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்காததும் மிகவும் மோசமான செயல். பல பிரதமர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளனர், ஆனால் இது போன்ற எந்தவித செயலும் நடந்ததில்லை.

இந்தியா கூட்டணி வலுவாக உருவாகி வருகிறது. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும், பா.ஜ.க வீட்டிற்கு அனுப்பப்படும். பா.ஜ.க-விடம் ஒரு கட்சிகூட கூட்டணி சேரவில்லை, இந்திய கூட்டணியில் 28 கட்சிகள் சேர்ந்துள்ளது.

2024 தேர்தலில் 400 சீட்டுகள் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் கூறுவது, தில்லுமுல்லு அரசியல்தான். வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிக்கிறார்கள். அமெரிக்காவில் இன்று வரை வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. அதேபோல் இந்தியாவிலும் வாக்குச்சீட்டு முறையே கொண்டு வர வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *