சிவில் நீதிபதிகள் தேர்வு: `தற்காலிகப் பட்டியல் ரத்து' – உயர் நீதிமன்றம் தீர்ப்பு; யாருக்கு பாதிப்பு?

651be098b9f86.jpg

தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ரத்துசெய்த சென்னை உயர் நீதிமன்றம், திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு பட்டியலை இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வு, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த 16-ம் தேதி தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்தத் தேர்வு பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை, பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்துசெய்து உத்தரவிட்டது.

அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை பொது பிரிவில் சேர்த்தும், மீதமுள்ள விண்ணப்பதாரர்களை இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி, காலிப் பின்னடைவுப் பணியிடங்களிலும், தற்போதைய காலியிடங்களிலும் சேர்த்து திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை, இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதிகள் (29.02.24) அன்று உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக Amicus curiae எனப்படும் நீதிபதிகளுக்குச் சட்ட நுணுக்கங்கள் குறித்து உதவும் மூத்த வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். “இது மிகவும் வரவேற்கத்தக்க தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு சொல்வது என்னவென்றால், நல்ல மதிப்பெண்கள் பெற்று மெரிட்டில் தேர்வாகும் நபர்களை பொது பட்டியலில் வைக்க வேண்டும். அவர்களை இட ஒதுக்கீடு பட்டியலுக்குள் கொண்டுவரக் கூடாது. K.ஷோபனா என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியமானது.

சட்டம்

இந்தத் தேர்வில் ஒரு மாணவர் 315 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதுதான் முதல் மதிப்பெண். அவரை MBC இட ஒதுக்கீட்டிற்குள் கொண்டு வருகிறார்கள். அவரை பொது பட்டியலில் கொண்டு வந்தால், அந்த இடம் குறைவான மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு கிடைக்குமே… இதனால் தேர்வு பட்டியல் முழுமையாக மாறும். புதிதாக நிறைய பேர் உள்ளே வருவார்கள். அதே நேரம் இதனால் குறிப்பிட்ட எந்த சாதியினருக்கும் சிக்கல் ஏற்படாது. ஆனால், புதிய தேர்வு பட்டியல் காரணமாக அதிகபட்சம் ஏற்கெனவே தேர்வான 20 முதல் 25 பேருக்கு பாதிப்பு ஏற்படலாம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *