Ration shop: “கைரேகை பதியலைன்னா…" – புலம்பும் ரேஷன் கடை ஊழியர்கள்!

999484 Ration.jpg

‘ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் அனைவரும் ரேஷன் கடையில் கைரேகை பதிய வேண்டும்’ என்று சமீப காலமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் அறிவுறுத்தி வருகின்றனர்.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, அந்தியோதயா அன்னயோஜனா மின்னணு ரேஷன் அட்டைகள் வைத்திருக்கும் அனைவரின் கைரேகையையும் சரிப்பார்க்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. இதன்படி தான் ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதியப்படுகிறது.

கைரேகை பதிந்தால் தான் பொருட்கள்…

‘கைரேகை பதிந்தால் தான் பொருள்கள்’ என்று கூறுகிறார்கள்… கைரேகை பதிய சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள் என மக்களிடம் இருந்து புகார்கள் கிளம்ப, தமிழக அரசிடம் இருந்து “தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகைகளை பதியும்போது எந்தவொரு ஆவணமும் கேட்கக்கூடாது. மேலும் கைரேகை பதிய சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று ஆணை வந்தது.

இந்த ஆணையை பற்றி ரேஷன் கடை ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது…

“அனைவரும் கைரேகை பதிய வேண்டும் என்பது முடியாத காரியம். பத்தாம் வகுப்பு, பதினோறாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளால் இந்த தேர்வு நேரத்தில் வந்து கைரேகையை பதிய முடிவதில்லை.

குழந்தைகளுக்கு ஆதார் அப்டேட் செய்வதில்லை…

குழந்தைகளை எடுத்துக்கொண்டால் அவர்களது ஆதார் கார்டு அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவதில்லை. அப்படியே ஆதார் அட்டையை அப்டேட் செய்ய சென்றாலும் கிட்டதட்ட ஒரு நாள் ஆகிவிடுகிறது. இதனால் ரேஷன் கடைகளில் குழந்தைகளின் கைரேகை எடுக்கும்போது பதிவாவதில்லை. இதனால் அரசு கண்டிப்பாக ஆண்டுக்கு ஒருமுறையாவது முகாம்கள் நடத்த வேண்டும்.

மேலும் வயசானவர்கள், கட்டட தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கும் கைரேகை பதிவாவதில்லை. மேலும் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வேலை செய்பவர்களுக்கு இது மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. வெளியூரில் இருப்பவர்கள் அங்கேயே பதிவு செய்யலாம் என்றாலும் சில ரேஷன் கடைகளில் பதிவதில்லை… இன்னும் சில ரேஷன் கடைகளில் அந்த கடை வாடிக்கையார்களின் கைரேகையை பதிந்த பின்னர் தான் பதிய முடியும் என்று கூறிவிடுகிறார்கள்.

கைரேகை கட்டாயமில்லை…

6 மணிக்கு மேல் வீட்டிற்கு நேரில் சென்று வாங்கலாம் என்று கூறுகிறார்கள். அப்படி செல்கையில் கைரேகை எடுக்கும் இயந்திரத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதன் பொறுப்பு எங்கள் தலையில் தான் விழும். கட்டாயமில்லை என்று பொதுவெளியில் சொல்லிவிட்டு, எங்களிடம் அனைவரின் கைரேகையையும் பதிய சொல்லி சொல்கிறார்கள். ‘எப்போது கைரேகை பதிய வேண்டும்’ என்று கூறினார்களோ…அப்போதிருந்தே பிரச்னையாக இருக்கிறது.

இந்த அனைத்து பிரச்னைகளை விட பெரிய பிரச்னையே, ‘இந்த கைரேகை எடுப்பது எதற்கு?’ என்றே எங்களிடம் சொல்லாதது தான்” என்று புலம்புகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *