தேனி: `இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி’ – எந்த அணியில் யாருக்கு சீட்… குழப்பத்தில் கட்சியினர்!

Ttv.jpg

தேனி மக்களவைத் தொகுதி பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும், போடி தொகுதியில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வமும் வென்ற வரலாறு இருக்கிறது. ஜெயலலிதாவால் முதல் முறை தேர்தலில் போட்டியிட களமிறக்கப்பட்ட டி.டி.வி.தினகரனும் எம்.பி., ஆக தேர்வாகியது தேனி தொகுதியில் தான். இதனால் தேனி நட்சத்திர தொகுதியாகவும், அதிமுக-வின் கோட்டையாகவும் இருந்தது.

ஓ.பி.எஸ் – ரவீந்திரநாத்

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த எம்.பி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மூத்த மகன் ரவீந்திரநாத், அப்போது அ.ம.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மும்முனை போட்டியில் இறங்கினர். இதில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக-வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு, ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பி.எஸ்., அவரின் மகன் ரவீந்திரநாத் எம்.பி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கட்சி சின்னம், கொடி பயன்படுத்தக் கூடாது என நீதிமன்ற உத்தரவு பெறபட்டது. இதையடுத்து ஓ.பி.எஸ்., தன் சொந்த மாவட்டத்தில் நடந்த கூட்டங்களில் கூட கட்சி கரைவேட்டி அணியமுடியாத நிலை ஏற்பட்டது. பெரியகுளத்தில் அவரால் நிறுவப்பட்ட கொடி கம்பங்களில் கூட கொடியேற்ற முடியாமல் போனது.

இபிஎஸ், ஓபிஎஸ்

இதற்கிடையே தேனி மாவட்ட அதிமுக-வினர் பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றனர். இதனால் சொந்த மாவட்டத்தில் ஓ.பி.எஸ் செல்வாக்கை இழக்க நேரிட்டது. கடந்த எம்.பி தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவரும் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கமே வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் மட்டுமில்லை கட்சி நிர்வாகிகள் கூட எம்.பி.,யை தொடர்பு கொள்ள முடியவில்லை. சொல்லிக்கொள்ளும் படியான திட்டங்களையம் கொண்டுவரவில்லை என தொகுதி மக்கள் விரக்தியில் உள்ளதாக எதிர் தரப்பினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை அமைத்துள்ள ஓ.பி.எஸ், தேனியில் அமமுக சார்பில் நடந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் உடன் இணைந்து பழனிசாமி நிறுத்தும் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்வோம் எனப் பேசினார். இந்த எம்.பி தேர்தலில் பாஜக., அமமுக கூட்டணியில் ஓ.பி.எஸ் தன் ஆதரவாளர்களையும் போட்டியிட வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஓபிஎஸ்

தேனி தொகுதியில் ரவீந்திரநாத் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறாராம். அப்படி போட்டியிட்டால் எந்த சின்னத்தில் போட்டியிடுவார், தாமரை சின்னத்திலா அல்லது குக்கர் சின்னத்திலா என்ற கேள்வி உள்ளது.

முக்குலத்தோர் சமுதாய மக்கள் அதிகம் உள்ள தேனி தொகுதியில் ஏற்கெனவே எம்.பியாக இருந்த டிடிவி தினகரன் எல்லோருக்கும் பரிச்சயமானவர். அவர் மீண்டும் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறலாம் என எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்து அதிமுக விசுவாசிகள் கட்டாயப்படுத்துகிறார்களாம். அண்மையில் அமமுக சார்பில் தேனி நடந்த பொதுக்கூடத்தில் அமமுக-வினர் மட்டுமில்லாது தற்போது எடப்பாடி, ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களாக இருப்பவர்களும் கலந்து கொண்டதாக சொல்கிறார்கள் அமமுக-வினர். இது டிடிவியை உற்சாகப்படுத்த ‘நல்ல முடிவு எடுப்போம்’ என உள்ளூர் நிர்வாகிகளிடம் கூறிச் சென்றிருக்கிறாராம்.

டிடிவி

தேனி எம்.பி தொகுதியில் அதிகமுறை அதிமுக வென்றிருந்த நிலையில் எம்.பி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யார் போட்டியிடுவது என்ற குழப்பம் நீடிக்கிறது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாக இருந்த தேனி மாவட்ட அதிமுக-வினர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்ற பிறகு அவர்களுக்குள் பனிப்போர் நிலவி வருகிறது. அதற்கு காரணம், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜக்கையன் தலைமையை தேனி அதிமுகவினர் ஏற்க விரும்பவில்லை. ஆனால் எடப்பாடியின் சமுகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தொடரட்டும் என பச்சை சிக்னல் காட்டப்பட்டுள்ளது. ஆனால் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் தலைமைக்கு கீழ் தான் செயல்படுவோம் என அதிமுக-வினர் முறுக்கி கொண்டு இருக்கின்றனர். மேலும் எம்.பி தேர்தலில் போட்டியிட யாரும் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்ற தகவலும் தொகுதிக்குள் பறக்கிறது.

ஜக்கையன்

இதனால் கட்சி நிர்வாகிகளுக்கு கூட பெரிதாக அறிமுகம் இல்லாத, தேனியைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் அதிபரும், பைனான்ஸ், திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டவருமான 70 வயதை தொடவுள்ள நாராயணசாமி என்பவர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளாராம். மேலும் தேர்தல் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாகக் கூறியிருப்பதால் இப்போதைக்கு அவரே அதிமுக வேட்பாளர் ரேஸில் முன்னணியில் உள்ளாராம். இப்படியான நிலையில் வரும் தேர்தலில் வாக்குகள் எப்படி பிரியும், யாருக்கு அது சாதகமாக அமையும் யாருக்கு பாதகமாக முடியும் என்பது தெரிய வரும்.!

 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *