ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா மோடி? – மாவட்ட பாஜக-வினர் சொல்வதென்ன?

Img 20240228 Wa0042 1 .jpg

`அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வராரு, தி.மு.க-வே இனி இருக்காது, தமிழ்நாட்டுக்கு இனி அண்ணாமலைதான்னு மேடையில பேசுறாரு…’ என்று மோடியின் தமிழக வருகையையும், அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதையும் மக்கள் பேசி வருகிறார்கள்.

“இதுக்கே இப்படீன்னா, ராமநாதபுரத்துல போட்டியிடும் அறிவிப்பு வந்தால் என்ன பண்ணுவீங்க?” என்கிறார்கள்  பா.ஜ.க-விலுள்ள முக்கிய நிர்வாகிகள்.

ராமநாதபுரம்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், மாநில நிர்வாகிகள் சுப.நாகராஜன், ஜி.பி.எஸ்.நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், குப்புராமு,  ரஞ்சனா நாச்சியார், அப்துல் கலாம் பேரன் என ஏகப்பட்டோர் வரிசை கட்டி நிற்கும் நிலையில், ‘மோடியே இங்கு போட்டியிடப்போகிறார்..’ என்று பரவுகின்ற தகவல், பா.ஜ.க-வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசும் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், “தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிடும் நாங்கள், சில தொகுதிகளிலாவது வெற்றி பெற்றவிட வேண்டும் என்பதில் தீவிரமாக திட்டமிட்டு வருகிறோம். இன்றைக்கு தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் தாமரைச் சின்னதை பிரபலப்படுத்திவிட்டோம். அண்ணாமலையின் பேச்சு சாமானிய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சி நிர்வாகிகளும், திராவிடக் கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செலவு செய்து அதிகமாக கூட்டத்தை கூட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

ஆனால், என்னதான் வேலை செய்தாலும், வாக்குப்பதிவின்போது தி.மு.க, அ.தி.மு.க -வினர், தங்கள் கட்சிக்கு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்று விடுகிறார்கள். கடைசி நேரத்தில் எங்கள் கட்சியினர் சோர்ந்து விடுகிறார்கள்.

பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடும் நிலையில், ஒருசில தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென்பது கட்சித் தலைமையின் கட்டளை. தென்னிந்தியாவில் என்னதான் பிரபல நிர்வாகிகள் போட்டியிட்டாலும், பணம் செலவு செய்தாலும் வெற்றி பெறுவது கஷ்டமாக உள்ளது. அதனால் தமிழ்நாட்டின் மக்கள் அனைவரின் கவனமும் பா.ஜ.க மீது குவிய வேண்டுமென்றால், பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். திராவிடக் கட்சிகளின் அரசியல் தாக்கத்திலிருந்து உடனே தமிழக மக்களை மாற்ற முடியாது. அதே நேரம் ஆன்மிகரீதியாக மாற்றலாம். நீண்டகாலமாகவே காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும், அயோத்திக்கும் ஆன்மிக தொடர்பு உள்ளது. அந்த அடிப்படையில்தான் காசி தமிழ்ச் சங்கத்துக்கும், அயோத்திக்கும் மக்களை அழைத்துச் சென்றோம்.

அந்த ஆன்மிகத் தொடர்பு அடிப்படையில் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் ஒட்டுமொத்த மீடியா கவனமும், மக்கள் கவனமும் பா.ஜ.க போட்டியிடும் அனைத்து தொகுதிகள்மீதும் குவியும். அதன் மூலம் வெற்றி எளிதாகும்.

ராமேஸ்வரம்

ராமநாதபுரம் பகுதியில் பா.ஜ.க உள்ளிட்ட சார்பு அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், மோடிதான் வேட்பாளர் என்று அறிவித்தால் இன்னும் தீயாக வேலை செய்வார்கள்” என்றனர்.

பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து மாவட்ட பா.ஜ.க தலைவர் தரணி முருகேசனிடம் பேசினோம். ”தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் ராமநாதபுரமும் ஒன்று. இந்நிலையில் பிரதமர் மோடி இங்கு போட்டியிட கட்சி தொண்டர்கள் விரும்புகின்றனர். அவ்வாறு அவர் போட்டியிட்டால், தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்துவதுடன், வெற்றியடையும் தொகுதிகளின் எண்ணிக்கையும் கூடும். ராமநாதபுரம் தொகுதியை பா.ஜ.க வெல்வதற்குத் தேவையான அடிப்படை பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். ஆளும் தி.மு.க-வை விட சிறப்பான தேர்தல் கட்டமைப்பு பணிகளை உருவாக்கி வருகிறோம்.

பா.ஜ.க மாவட்டத் தலைவர் தரணி முருகேசன்

கடந்த காலங்களில் மக்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க தயாராக இருந்த நிலையில், அந்த வாக்குகளை முறையாக சேகரிக்காததால் தோல்வியை தழுவினோம். ஆனால், தற்போது அந்த நிலையை மாற்றியுள்ளோம். சாதாரண மக்கள் தொடங்கி முக்கிய பிரமுகர்கள் வரை கட்சியை கொண்டு சென்றுள்ளோம். இத்துடன் பா.ஜ.க அரசு இந்த தொகுதிக்கு என ராமநாதபுரம் – தனுஷ்கோடி இடையேயான நான்குவழி சாலை, பாம்பன் கடலில் புதிய இருவழி ரயில் பாலம், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு, அம்ருத் சிட்டி திட்டத்தின்கீழ் ராமேஸ்வரத்தின் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு, ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் புனரமைப்பு, ஜல் ஜீவன் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதனால் சிறுபான்மை இன மக்கள்கூட பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பார்கள். எனவேதான் பிரதமர் மோடி இங்கு போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். அவர் போட்டியிட வாய்ப்பு இல்லாத நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடவும் வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரும் இங்கு போட்டியிடாத நிலையில், எனக்கும் இங்கு போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளேன். கட்சி அந்த வாய்ப்பை எனக்கு வழங்கும் என எதிர்பார்க்கிறேன். அதே நேரத்தில் கட்சித் தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை வெற்றி அடைய செய்ய முழுவீச்சுடன் களப்பணி ஆற்றுவோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *