`கெஜ்ரிவாலை எதிர்த்து சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிடுவேன்..!' – சுகேஷ் சந்திரசேகர்

Sukesh Kejriwal 2024021185523.jpeg

தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடியை மிரட்டிப் பறித்தது தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு, டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், அந்தப் பணத்தில் நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அதிக அளவு பரிசு மற்றும் பணம் வாங்கிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், தன்னை அச்சுறுத்துவதாக சுகேஷ் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக சுகேஷ் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, சுகேஷ் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

சுகேஷ், கெஜ்ரிவால்

அக்கடிதத்தில், “அச்சுறுத்தலைக் கண்டு நான் பயப்படவில்லை. சி.பி.ஐ முன்பு உண்மையை வெளிப்படுத்துவேன். அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுவேன். எனக்கு மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். கெஜ்ரிவாலுக்கு எதிராக சுகேஷ் குற்றம்சாட்டுவது இது முதன்முறை கிடையாது.

சுகேஷ் சந்திரசேகர்

ஏற்கெனவே 2023-ம் ஆண்டு டெல்லி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், `கெஜ்ரிவால் புதிய வீடு வாங்கியது குறித்து விசாரிக்கவேண்டும்’ என்றும், `கெஜ்ரிவால் வீட்டுக்குத் தேவையான மரச்சாமான்களுக்கு நான்தான் பணம் கொடுத்தேன்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு `பிளேட்கள், வெள்ளி கிளாஸ்கள், சாமி சிலைகள், ரூ.45 லட்சம் மதிப்பிலான 12 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையிலான டைனிங் டேபிள், 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிரஸ்ஸிங் டேபிள், 7 கண்ணாடிகள், சுவர் கடிகாரம் போன்ற பொருட்களையும் அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு வாங்கிக் கொடுத்தேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *