இவர்கள் விஷயத்தில் மட்டும் ஏன் `திராவிட மாடல்', `பாரத மாடல்' எல்லாம் பல் இளிக்கின்றன..?

Whatsapp Image 2024 02 19 At 10 07 34.jpeg

‘உயர்கல்வி பயில விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்’ என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துவரும் வேளையில், திருநர் சமூகத்தின் அடிப்படை பிரச்னையை சரிசெய்யாமல் இந்த அறிவிப்பு பலனைத் தராது என்ற சர்ச்சையும் எழுந்திருக்கிறது.

இந்த அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய எழுத்தாளர் கிரேஸ் பானு, “நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த அறிவிப்பை வெளியிடும்போது, ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்று குறிப்பிட்டதை முதலில் நான் எதிர்க்கிறேன். நாங்கள் மூன்றாம் பாலினத்தவர் என்றால் முதல் இரண்டு பாலினத்தவர் யார்? அடுத்து, உயர் கல்விக்கான கட்டணச் செலவு மற்றும் விடுதிக்கான செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ஆனால், அதில் பல குழப்பங்கள் இருக்கின்றன. மருத்துவம் படிக்க வேண்டுமெனில் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற வேண்டும். அந்தச் செலவுக்கு யார் பொறுப்பேற்பது? அடுத்து, எங்களை ஆண் விடுதியில் தங்க வைப்பார்களா அல்லது பெண் விடுதியில் தங்க வைப்பார்களா அல்லது எங்களுக்கென தனியாக விடுதியை ஏற்படுத்துவார்களா என்பது குறித்து தெளிவு இல்லை. இதனை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இப்படி பல குழப்பங்கள் உள்ளன.

கிரேஸ் பானு

இதற்கு முன்னரே சென்னை பல்கலைக்கழகம், மனோன்மணியம் பல்கலைக்கழகம் திருநங்கைகளுக்கு இலவச கல்வி என அறிவித்தன. ஆனால், அந்த அறிவிப்பு செயல்பாட்டில் இல்லை. அங்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எதுவுமே வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் செயல்பாட்டுக்கு வர வேண்டும். அதற்கு முன்பு இங்கு திருநர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் படிப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

எங்களுக்கான இட ஒதுக்கீடு கொடுத்தாலே எங்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு என எங்களுடைய தேவைகளை நாங்களே பெற்றுக்கொள்வோம். `கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று கடந்த ஜனவரி 8-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியது. ஆனால், இதுவரை தமிழக அரசு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு அறிவித்திருக்கும் இந்தச் சலுகைகள் எல்லாம் நலன் சார்ந்த திட்டங்கள். ஆனால், எங்கள் சமூகத்திற்குத் தேவையோ உரிமை சார்ந்த திட்டங்கள். எனவே, தமிழக அரசு விரைந்து எங்கள் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து பேசிய முனைவர் பட்ட ஆய்வாளர் (திருநம்பி) சோனேஷ் குமார், “இந்த அறிவிப்பு வரவேற்க வேண்டிய ஒன்றுதான். ஆனால் ஏற்கெனவே படித்த திருநங்கை, திருநம்பிகள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். திருநர் என்ற ஒரே காரணத்துக்காக நாங்கள் படித்திருந்தால்கூட எங்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. அப்படியே ஒருசிலர் வேலை கொடுத்தாலும் மனிதாபிமான அடிப்படையில்தான் வேலை வழங்குகிறார்கள்… எங்கள் திறமை மதிக்கப்படுவதில்லை.

சோனேஷ் குமார்

அதனால் படித்தவர்கள்கூட யாசகம் பெறும் நிலைக்குச் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் திருநம்பிகள் கட்டாயமாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. படித்து மட்டும் என்ன செய்வது? எங்களுக்கான வேலை வாய்ப்பை முதலில் உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகு இந்தச் சலுகைகளை அறிவிக்கட்டும்” என்றார்.

பொருளாதார சூழ்நிலையால் உயர் கல்விக்குச் செல்ல முடியாத திருநங்கை யாழினி இந்த அறிவிப்பு குறித்து பேசுகையில், “இது மிகவும் தாமதமாக வந்த அறிவிப்பு. ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு ஓடி வந்து ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட நான், எங்கே உயர் கல்வி பெற முடியும்? பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த எனக்கு குடும்ப அரவணைப்பும் பொருளாதாரமும் இல்லாததால் பள்ளிக் கல்வியோடு நிறுத்திக்கொண்டேன். இந்தத் திட்டம் நான் படிக்கும்போது வந்திருந்தால் இந்நேரம் நானும் ஒரு பட்டதாரியாக இருந்திருப்பேன்.

திருநங்கை யாழினி

எங்கேயாவது நல்ல வேலைக்குச் சென்றிருப்பேன். தமிழக அரசு இந்தத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். என்னைப் போல் பொருளாதாரத்தால் கல்வி தடைப்பட்ட எத்தனையோ திருநங்கைகளுக்கு இது பேருதவியாக அமையும். இந்தத் திட்டத்தின் மூலம் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தால் இப்போதும் நான் படிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

மனிதகுலம் என்று பெருமை பேசுகிறோம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக… நிலவிலேயே நாங்கள் குடியேறுவோம் என கொக்கரிக்கிறோம். ஆனால், பக்கத்திலேயே ரத்தமும் சதையுமாக நின்றுகொண்டிருக்கும் சக உயிர்களுக்கு இயற்கையாகவே கிடைக்க வேண்டிய உரிமைகளை மட்டும் தட்டிப்பறித்துக் கொண்டே இருக்கிறோம். குறைந்தபட்சம் அவர்களை மனிதர்களாக மதிக்கக்கூட மறுக்கிறோம்.

திராவிட மாடல், குஜராத் மாடல், பாரத மாடல் என அனைத்தும் இந்த விஷயத்தில் பல் இளிக்கவே செய்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *