Sandeshkhali: `அடாவடித்தனம்… உடம்பெல்லாம் நடுங்குகிறது!' – மம்தா அரசைச் சாடும் நிர்மலா சீதாராமன்

21 Rvm6120.jpg

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் சந்தேஷ்காலி கிராமத்தில் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், ஷாஜகான் ஷேக்கை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று சந்தேஷ்காலி மக்கள் மூன்று வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஷாஜகான் ஷேக் – Sandeshkhali

ஆனால், ஜனவரி 5-ம் தேதிமுதல் தலைமறைவாக இருக்கும் ஷாஜகான் ஷேக் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. இன்னொருபக்கம், எதிர்க்கட்சியான பா.ஜ.க-வும் சந்தேஷ்காலி மக்களை நேரில் சந்திக்க முயன்று வருகிறது. ஆனால், சந்தேஷ்காலி கிராமத்தைச் சுற்றி போலீஸார் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால், பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கக்கூட மம்தா பானர்ஜி அரசு அனுமதி மறுப்பதாகவும், ஷாஜகான் ஷேக்கை பாதுகாத்து வருவதாகவும் பா.ஜ.க குற்றம்சாட்டிவருகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் நிலம் அபகரிக்கப்பட்டிருந்தால் திருப்பியளிக்கப்படும் என்று கூறிய முதல்வர் மம்தா பானர்ஜி, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பற்றி எதுவும் கூறவில்லை. இவ்வாறிருக்க, ஷாஜகான் ஷேக்கை கைதுசெய்யுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றமும் கூறியது. திரிணாமுல் காங்கிரஸ் அரசும், ஏழு நாள்களில் ஷாஜகான் ஷேக் கைதுசெய்யப்படுவார் என்று கூறியது.

மம்தா பானர்ஜி

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சந்தேஷ்காலி பற்றிப் பேசும்போது உடம்பெல்லாம் நடுங்குவதாகத் தெரிவித்திருக்கிறார். மேற்கு வங்கத்திலுள்ள தேசிய நூலகத்தில் நேற்று மக்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், “சந்தேஷ்காலியைப் பற்றியும், இன்று வரை குற்றவாளியைக் கைதுசெய்யாத மாநில அரசின் அடாவடித்தனத்தைப் பற்றியும் பேசும்போது, என் உடல் நடுங்குகிறது. ஆணோ, பெண்ணோ… இதைத் தாங்கக்கூடிய தலைவர் இருக்க முடியுமா?

நிர்மலா சீதாராமன்

அவர்கள் இன்னும் அந்த நபரைக் கைதுசெய்யவில்லை. ஆனால், மணிப்பூர் பிரச்னையை அவர்கள் எத்தனை முறை எழுப்பினார்கள் என்று எனக்கு நினைவிருக்கிறது. ஷாஜகான் ஷேக் எங்கிருக்கிறார் என்பது அவர்களுக்கு (திரிணாமுல் காங்கிரஸ்) தெரியும். இல்லையென்றால், ஒரு வாரத்தில் கைதுசெய்வோம் என்று எப்படிச் சொல்ல முடியும்… அமைச்சர்கள் மட்டும் சந்தேஷ்காலிக்குள் செல்கிறார்கள். மற்றவர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இது என்ன மாதிரியான சட்டம் ஒழுங்கு” என்று கேள்வியெழுப்பினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *