GV Prakash: `கண்ணீர் அஞ்சலி; தற்கொலை எந்தச் சூழலிலும் ஏற்புடையதல்ல..!' – ஜி.வி.பிரகாஷ் ட்வீட்

Untitled Design 2024 02 28t133615 520.png

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதல் இஸ்ரேல் – காஸா போர் நடந்து வருகிறது. ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் போர் நிறுத்த கோரிக்கை, கண்டனம், எதிர்ப்பு, தீர்மானம் என பல்வேறு வகையில் முயன்றும், இஸ்ரேல் இன்றுவரை போரை நிறுத்தவில்லை. இந்தப் போரில் இதுவரை 29,300 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

ஞாயிற்றுக்கிழமை தனியார் செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டியில், “சர்வதேச விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தாக்குதலை தொடர்கிறோம். ஒருவேளை அமெரிக்கா எங்களைப்போல தாக்குதலை சந்தித்திருந்தால், இன்னும் நிறைய நரகங்களைச் அழித்திருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் சான் அன்டோனியோவைச் சேர்ந்தவர் ஆரோன் புஷ்னெல் (25).

அமெரிக்க விமானப்படையில் உயர் பதவியில் இருந்த இவருக்கு, நெருங்கிய இராணுவ தொடர்புகள் இருந்தன. இந்த நிலையில், ஆரோன் புஷ்னெல் காஸா போர் தொடர்பாக தொடர்ந்து அதிருப்தியில் இருந்துவந்ததாகத் தெரிகிறது. அது தொடர்பாக பல்வேறு நிகழ்வுகளையும் முன்னெடுத்திருக்கிறார். இந்த நிலையில், இஸ்ரேல் – காஸா போர் முடிவுக்கு வராத நிலையில், அவர் பல நிருபர்கள் மற்றும் இடதுசாரி செய்தி வலைதளங்களுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

தற்கொலை செய்துகொண்ட ஆரோன் புஷ்னெல்:

அதில், “இன்று, நான் பாலஸ்தீன மக்களின் இனப்படுகொலைக்கு எதிராக ஒரு தீவிர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை, வாஷிங்டன் டி.சி-யில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன்பு ராணுவ சீருடையில் வந்த ஆரோன் புஷ்னெல், “காஸாமீது இஸ்ரேலின் தீவிரமான எதிர்ப்புச் செயல்… இனி மேலும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன். பாலஸ்தீனத்தை விடுவித்துவிடுங்கள்” என்று முழக்கமிட்டு, தன்னுடலில் தீ வைத்துக்கொண்டார்.

உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் தீயை அணைக்க முயன்று, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தற்கொலை தொடர்பாக வாஷிங்டன் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

கண்டனம் தெரிவிக்கும் ஆர்வலர்கள்

ஆரோன் புஷ்னெல் தற்கொலையைத் தொடர்ந்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், “மனிதம் காக்க தன்னுயிர் ஈந்த மாமனிதனுக்கு என் கண்ணீர் அஞ்சலி – தற்கொலைகள் எந்தச் சூழலிலும் ஏற்புடையதல்ல” என தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *