`மோடி எனும் மகான்; கவர்ந்திழுக்கப்பட்டு பாஜக-வில் இணைந்திருக்கிறேன்!' – விஜயதரணி பேச்சு

Vijayatharani 4.jpg

தமிழகத்தில் இரண்டு நாள்கள் பயணமாக வந்த பிரதமர் மோடி, இன்று (பிப்ரவரி 28-ம் தேதி) நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் பள்ளியின் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். முதன்முறையாக நெல்லைக்கு வருகை தந்த பிரதமருக்கு, பா.ஜ.க நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, விஜயதரணி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களான தேவநாதன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பாக குமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயதரணி, அண்மையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். புதிதாக கட்சியில் சேர்ந்த அவருக்கு பிரதமர் பங்கேற்கும் விழாவின் மேடையில் முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க பொதுக்கூட்ட மேடையில் விஜயதரணி பேசவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பொதுக்கூட்டம்

பா.ஜ.க பொதுக்கூட்ட மேடையில் முதன்முதலாகப் பேசிய விஜயதரணி, “உலக நாடுகளுக்கே வழிகாட்டக்கூடிய மகானாகத் திகழும் பிரதமர் மோடியைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. அதனால்தான் நான் கவர்ந்து இழுக்கப்பட்டு கட்சியில் இணைத்துக் கொண்டேன். எனக்கு மிக்க மகிழ்ச்சி. நான் வேறு இடத்தில் இருப்பதுபோல எந்த உணர்வும் இருக்கவில்லை. சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வே இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியினர் அனைவருமே தேசிய உணர்வோடு இருப்பதோடு தேசிய நீரோட்டத்தில் கலந்திருக்கிறார்கள். அந்த வகையில் பா.ஜ.க தொண்டர்கள் ஒவ்வொருவரும் தேசியத்தின் தூண்களாகத் திகழ்கிறார்கள். பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியிருக்கிறார். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கடந்த 40 வருடங்களாக மகளிர் அனைவருமே எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அதை சட்டமாக்கியிருக்கிறார்.

பிரதமரை சந்தித்த விஜயதரணி

முத்தலாக் என்பதை முழுமையாக ஒழித்து இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றியிருக்கிறார். இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடைக்கும் வகையில் சட்டம் இயற்றியிருக்கிறார். அதனால் நாட்டில் உள்ள இஸ்லாமிய பெண்கள், ஆண்கள் என அனைவருமே இந்த சட்டத்தை ஆதரித்து வருவதால் அவர்களின் வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சிக்கே கிடைக்கும்.

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க என பல ஆட்சிகளை நான் பார்த்து விட்டேன். அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிடுவார்கள். ஆனால் அதற்கான நிதிகூட ஒதுக்குவதில்லை. இது பற்றி நான் பலமுறை சட்டமன்றத்தில்கூட கேட்டிருக்கிறேன். ஆனால் நமது பிரதமர் அறிவித்த ஒரு திட்டம்கூட நடைமுறைக்கு வராமல் இருக்கவில்லை. அதற்கான கடைசிக் கல் இன்று தூத்துக்குடியிலும் குலசேகரபட்டினத்திலும் நிறுவப்பட்டிருக்கிறது.

மேடையில் கூட்டணிக் கட்சியினருடன் மோடி

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் என்பது பிரதமர் மோடியின் தேர்தல்தான். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இதை எந்தக் கட்சியும் மறுக்கப்போவதும் இல்லை. மக்களுக்கும் இது தெரியும். நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு, சிரமங்களுக்குப் பிறகு ஒரு நல்ல முடிவெடுத்து வந்திருக்கிறேன். அதை எல்லோரும் சந்தோஷமாக வரவேற்கிறீர்கள். நான் உங்கள் குடும்பத்தில் ஒருவராக உங்களோடு பயணிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நிச்சயமாக நாட்டை வழிநடத்தும் பாரதப் பிரதமரின் வழியில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செல்வோம்” என்று விஜயதரணி பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *