இரண்டு திமுக மா.செ.க்கள் மாற்றம்..! – அதிரடி காட்டிய தலைமை; பின்னணியில் உதயநிதியின் டீம்?!

64ede66e9e6d6.jpg

“உங்கள் தொகுதியில் நமது வேட்பாளர் தோல்வியடைந்தால், உங்களுடைய மாவட்டச் செயலாளர், மந்திரி பதவியில் நீங்கள் நீடிக்க முடியாது. சீனியர், ஜூனியர் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். பதவி பறிக்கப்படுவது உறுதி…” என்று கடந்த அக்டோபர் மாதம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக கொதித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர்கள் மீதான இறுகும் வழக்குகள், லோக்கலில் கலாட்டா செய்யும் கவுன்சிலர்கல் என தி.மு.க-வில் பல பிரச்னைகள் வரிசைக்கட்டி நின்றன. எனவே, இந்த நாடாளுமன்றத் தேர்தலை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாதென்று தி.மு.க தலைமை ஆரம்பத்தில் தனது பிடியை இறுக்கிறது. அதன்படிதான், நாடாளுமன்றத் தேர்தலுக்காக சட்டமன்றத் தொகுதிகளில் பூத் ஏஜென்ட்டுகள் நியமனத்தைக் கண்காணிப்பதற்கும் தொகுதி நிலவரத்தை அறிந்து வாரம் ஒரு முறை ரிப்போர்ட் அளிக்கவும் 234 தொகுதிப் பொறுப்பாளர்களை நியமித்திருந்தது கட்சித் தலைமை. பூத் மட்டத்திலான பணி நிலவரங்கள் குறித்து விவாதிப்பதற்கு, இதுவரை பல முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடந்திருக்கின்றன.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், “பதவி நீடிக்கணும்னா உழைக்கணும். அவங்களோட கட்சிப் பணிதான் அவங்க பதவியைக் காப்பாற்றிக் கொடுக்கும். எந்தவொரு தனிமனிதரையும்விடக் கட்சியும், அது அடையவேண்டிய வெற்றியும்தான் எனக்கு முக்கியம். சட்டமன்றத் தேர்தலைவிட, இந்த நாடாளுமன்றத் தேர்தல் எனக்கு முக்கியமானது. வெற்றிக்கு உழைக்காத யாரையும் பதவியில் வைத்துக்கொள்ள நான் விரும்ப மாட்டேன்.

திமுக ஆலோசனையில் மா.செ-க்கள் அமைச்சர்கள், ஸ்டாலின்

நமது வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும். ஒருவேளை தோல்வியைச் சந்தித்தால், அந்தத் தொகுதியின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பதவியில் நீடிக்க முடியாது. சீனியராக இருந்தாலும் சரி, ஜூனியராக இருந்தாலும் சரி… ஜெயித்தால்தான் பதவி.” என்று கறாராக பேசி இருந்தார் ஸ்டாலின். அந்த கூட்டத்தைத் தொடர்ந்து பல மா.செ.க்கள் கட்சி பணியை துரிதப்படுத்தினர். அதன் பின்னரும் ஆமை வேகத்தில் கட்சி பணிகளை மேற்கொண்ட மா.செ.க்களை தூக்கி அடிக்க முடிவு செய்தது தலைமை.

அதன்படி, தற்போது இரண்டு மாவட்ட செயலாளர்களை தூக்கி அடித்து இருக்கிறது தலைமை என்கிறார்கள் அறிவாலய புள்ளிகள்.

இதுதொடர்பாக தி.மு.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

“2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெறுவதை தாண்டி, 2026 சட்டமன்றத் தேர்தலின் வெற்றியை உறுதி செய்ய தலைமை மும்மரமாக வேலை செய்கிறது. அதன்படிதான் கடந்த ஆண்டே பூத் கமிட்டி, உறுப்பினர் சேர்க்கை, சர்வே, வேட்பாளர்கள் தேர்வு என மொத்த பணிகளையும் தொடங்கிட்டது. கட்சி பணியை சரிவர செய்யாத நிர்வாகிகளையும், அமைச்சர்களை மாற்ற தயக்கம் காட்டமாட்டேன் என்று தலைமை ஏற்கனவே எச்சரித்தது.

இளைய அருணா

ஆனாலும் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இளைய அருணா, தலைமை எதிர்பார்த்த அளவு கட்சி பணியை மேற்கொள்ளவில்லை. இளைய அருணாவின் கீழ் ஆர்.கே.நகர், ராயப்புரம், பெரம்பூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. இந்த தொகுதிகளுக்கான நிர்வாகிகள் நியமனம், பூத் கமிட்டி அமைப்பு உள்ளிட்ட எந்த பணிகளும் முழுமையாக முடிக்கவில்லை இளைய அருணா. அதுமட்டுமல்லாமல், மாவட்ட கழகம் சார்பில் கட்சி நிகழ்ச்சிகளும் நடத்தப்படாமல் இருந்திருக்கிறது. மேலும், அமைச்சர் சேகர் பாபுவின் கட்டுப்பாட்டில் இளைய அருணா செயல்படுவதாகவும் மாவட்ட நிர்வாகிகள் தலைமைக்கு பல புகார்களை அனுப்பி இருந்தனர்.

இதுகுறித்து இளைய அருணாவிடம் தலைமை கழகத்தில் விசாரணை நடந்தது. முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் உறவினராக இருக்கும் நீங்கள், திறம்பட செயல்படுவீர்கள் என்றுதான் தலைமை உங்களை நியமித்தது. சேகர்பாபுவின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குவது பிரச்னையில்லை. ஆனால், மாவட்ட கழக நிர்வாகிகளையும், மூன்று எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்களை அனுசரித்து செல்லவேண்டும் என்று அருணாவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனாலும், அவரின் செயல்பாடு தலைமை எதிர்பார்த்த அளவில் இல்லை.

அமைச்சர் சேகர்பாபு

நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் அருணா வசம் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், அங்கு கட்சி மோசமான நிலையில் இருப்பதை தலைமை விரும்பவில்லை. வடசென்னை தொகுதியை பொறுத்தவரையில் கணிசமான நாடார் சமூக வாக்குகள் இருக்கின்றன. எனவேதான் பல எதிர்ப்புகளை தாண்டி, அந்த சமூகத்தைச் சேர்ந்த அருணாவுக்கு மா.செ பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆர்.டி.சேகர்

ஆனால், அதை அவர் தக்கவைக்கவில்லை. ‘பதவி கிடைத்தது பரிந்துரையால் இருக்கலாம். அது நீடிக்கணும்னா உழைக்கணும். கட்சிப் பணிதான் பதவியைக் காப்பாற்றிக் கொடுக்கும். சிபாரிசு எதுவும் காப்பாற்றாது’ என்று முதல்வர் ஏற்கனவே எச்சரித்ததுபோல, அருணாவின் பதவியை அமைச்சர் சிபாரிசும் காப்பாற்றவில்லை. அதன்படி, புதிய மா.செ.வாக பெரம்பூர் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அவரிடமும் தலைமை சொன்னது, ‘ வேலைதான் பதவியை காப்பாற்றும்’ என்பதுதான்.

அதேபோல, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரனுக்கு வயது முதிர்வு காரணமாக கட்சிப் பணியை சரிவர செய்ய முடியவில்லை என்று தலைமையிடம் கூறி இருக்கிறார். அங்கு திமுக எம்.பி ஆ.ராசாவின் தலையீடு அதிகமாக இருப்பதால், எல்லாவற்றையும் எதிர்த்து ராஜேந்திரனால் அரசியல் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

குன்னம் ராஜேந்திரன்

இதன்காரணமாக அந்த இடத்துக்கு புதிய பொறுப்பாளரை நியமிக்க தலைமை முடிவு செய்தது. அதன்படி, திமுக எம்.பி ஆ.ராசாவின் சிபாரிசின் அடிப்படையில் வேப்பந்தட்டை கிழக்கு தி.மு.க முன்னாள் ஒன்றிய செயலாளர் வேப்பந்தட்டை வி.ஜெகதீசன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

வேப்பந்தட்டை வி.ஜெகதீசன்

இந்த இரண்டு மா.செ.க்கள் மாற்றத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனத்திலும் இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதியின் டீம் ஒர்க்கும் இருக்கிறது. தலைவரின் உத்தரவின்பெயரில் உதயநிதியின் வழிகாட்டுதலில்தான் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இன்னும் பல மாவட்டங்களில் அதிரடி மாற்றமிருக்கும்.” என்றனர் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *