அங்கே ஆந்திரா… இங்கே கர்நாடகா… தமிழக அரசை ‘அணை’ கட்டும் அண்டை மாநிலங்கள் – அறிக்கை விடும் திமுக!

Palaaru.jpg

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன என்று கூறி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கும் நிலையில், ஆந்திர அரசும் பாலாற்றின் குறுக்கே 23-வது அணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியிருக்கிறது. இரு அண்டை மாநிலங்களும் தமிழ்நாட்டுக்கு வரும் ஆறுகளைத் தடுத்து அடுத்தடுத்து அணை கட்ட தீவிரமாகிக்கொண்டிருக்க, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடியாக… செய்வதறியாது விழித்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.

மேக்கேதாட்டூ

காவிரியில் அணை – பட்ஜெட்டில் அறிவித்த கர்நாடகா:

சமீபத்தில், 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, “காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறோம். மேக்கேதாட்டூ அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மூன்று சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அணை கட்டப்படவிருக்கும் பகுதியில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி, வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வுப் பணி உள்ளிட்டவை ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. மத்திய அரசிடம் தேவையான அனுமதி பெறப்பட்டதும் முன்னுரிமை அடிப்படையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, மேக்கேதாட்டூ அணை கட்டிமுடிக்கப்படும்!” எனத் தெரிவித்தார். இது தமிழ்நாடு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்த, விவசாய சங்கங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கர்நாடக அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். அப்போது பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசால் மேக்கேதாட்டூ அணை கட்ட முடியாது! அதுதான் சட்டம், அதுதான் நியதி! கர்நாடகா அரசு நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம், ஆனால் எந்தக் காலத்திலும் அணை கட்ட முடியாது. மேக்கேதாட்டூ பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை!” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில் மற்றொரு நதிநீர்ப் பிரச்னையை ஆந்திர அரசு கிளறியிருக்கிறது.

பாலாற்றில் அணை – அடிக்கல் நாட்டிய ஆந்திரா:

பாலாற்றில் ஏற்கெனவே 22 தடுப்பணைகளைக் கட்டி தமிழ்நாட்டுக்கு வரும் நீரை ஆந்திர அரசு தடுத்துவரும் நிலையில், புதிதாக 23-வது அணையைக் கட்டவும் அடிக்கல் நாட்டியிருக்கிறது. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, புதிய தடுப்பணைக்காக ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டார். இது தமிழ்நாடு மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர அரசின் அறிவிப்புக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, த.வா.க தலைவர் வேல்முருகன், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

பாலாற்றில் அணை கட்ட அடிக்கல் நாட்டிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

இந்த நிலையில், ஆந்திராவின் தடுப்பணை கட்டும் விவகாரத்துக்கு எதிர்வினையாற்றிருக்கும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். 1892-ம் ஆண்டின் மதராஸ் – மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். 1892-ம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்னையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892-ம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும், உச்ச நீதிமன்றம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுப்பட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும்.

அமைச்சர் துரைமுருகன்

மேலும், இதற்கு முன்பு சித்தூர் மாவட்டம் கணேஷபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஓர் அணையைக் கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழக அரசு 10.02.2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது. இதற்கிடையே, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இரு மாநிலங்களின் நட்புக்கு ஏற்றதல்ல. மேலும், கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால், ஆந்திர அரசு இந்த அணைக்கட்டும் பிரச்னையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இம்மாதிரியான எந்த வித செயல்களையும் மேற்கொள்ளக் கூடாது!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *