‘என்னை இருட்டடிப்புச் செய்கிறார்கள்’ – பொங்கியெழுந்த முன்னாள் அமைச்சர்; வீதிக்குவந்த அதிமுக சண்டை

Whatsapp Image 2024 02 27 At 4 56 37 Pm.jpeg

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், ஆரணி அருகேயுள்ள நேத்தப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மத்திய மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஜெயசுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான சேவூர் ராமச்சந்திரன், ‘‘இந்தக் கூட்டம் ஆரணி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க சார்பில்தான் நடைபெறும் என்று அறிவிப்புக் கொடுத்திருந்தார் அண்ணன் எடப்பாடியார். ஆனால், மாவட்டக் கழகம் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகை விளம்பரங்களிலும் இந்தப் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான என்னைப் புறக்கணிப்புச் செய்திருக்கிறார்கள். நான் பிறந்தது, வளர்ந்தது இந்த சட்டமன்றத் தொகுதியில்தான். என்னை மூன்று முறை உள்ளாட்சிப் பிரதிநிதியாகவும், 2016 சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பளித்து அமைச்சர் பொறுப்பிலும் அமரவைத்து அழகுப் பார்த்தவர் மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள். அடுத்தபடியாக, 2021-ல் எனக்கு மீண்டும் வாய்ப்பளித்து சட்டமன்ற உறுப்பினராக்கியிருக்கிறார் அண்ணன் எடப்பாடியார்.

சேவூர் ராமச்சந்திரன்

அப்படியிருக்கையில், என் பெயரை பேனர்களிலும், துண்டு பிரசுரங்களிலும் மூன்றாவதாகப் போட்டிருக்கிறார்கள். புதிதாக மாவட்டச் செயலாளர் அறிவிக்கப்பட்ட இந்த ஐந்து மாதங்களில்தான் இதெல்லாம் நடக்கிறது. சட்டமன்ற உறுப்பினரான எனது படத்தை பிரசுரம் செய்யக் கூடாது என மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தியிருக்கிறார். மாவட்டச் செயலாளர் தன் கட்டுப்பாட்டில் நிர்வாகிகளை வைத்துக்கொண்டு என்னை இருட்டடிப்புச் செய்ய நினைக்கிறார். அவரைக் கண்டிக்கின்றேன்’’ என்று வெளிப்படையாகப் பேசிவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினார்.

அப்போது, சேவூர் ராமச்சந்திரனை சூழ்ந்துகொண்ட அவரது ஆதரவாளர்கள் ‘மாவட்டச் செயலாளர் ஜெயசுதா ஒழிக’ என்று கோஷம் போட்டனர். இதனால், மேடை மீது அமர்ந்திருந்த மற்றொரு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும், மாவட்டச் செயலாளர் ஜெயசுதாவுக்கும் முகம் இறுகியது. இருவரும் சேவூர் ராமச்சந்திரனின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக முறைப்புக் காட்டினர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

‘முன்னாள் அமைச்சர் ஒருவரே… உட்கட்சி சண்டையைப் பொதுமேடையில் போட்டுடைக்கக் காரணம் என்ன?’ என்பது குறித்து ஆரணி பகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். அவர்கள், ‘‘மத்திய மாவட்டச் செயலாளர் ஜெயசுதா போளூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். கட்சியைப் பலப்படுத்துவதற்காகத்தான் ஆரணி, போளூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பு ஜெயசுதாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தீவிர ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொண்டு ஜெயசுதா வலம் வந்துகொண்டிருக்கிறார்.

ஜெயசுதா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஆரணி எம்.எல்.ஏ-வாக சேவூர் ராமச்சந்திரன் இருக்கிறார். போளூர் எம்.எல்.ஏ-வாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி இருக்கிறார். இரண்டுப் பேருமே முன்னாள் அமைச்சர்கள் என்பதால், இந்தப் பகுதியில் யார் அதிகாரம் செலுத்துவது என்பதிலும் போட்டி நிலவுகிறது. அதேசமயம், செங்கம், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதிகளில் கட்சிப் பணிகளை கவனிக்காமல் ஆரணியில் வந்தே அரசியல் செய்துகொண்டிருக்கிறார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. பேனர்கள், போஸ்டர்களில்கூட சேவூர் ராமச்சந்திரனின் பெயரைச் சின்னதாக போடச்சொல்கிறார்கள். இல்லையென்றால், ‘அவரது படத்தையே போட வேண்டாம்’ என்கிறார்கள். இதெல்லாம்தான் சேவூர் ராமச்சந்திரனையும், அவரது ஆதரவாளர்களையும் கொதிப்படையச் செய்திருக்கிறது. இப்போது நடைபெற்ற நிகழ்ச்சிக்குக்கூட முறைப்படி அழைப்பு விடுக்காமல் சேவூர் ராமச்சந்திரனை அசிங்கப்படுத்திவிட்டார்கள். அந்த கோபத்தின் வெளிப்பாடே பொதுமேடையில் அவர் இப்படி ஓப்பனாகப் பேசக் காரணம்’’ என்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *