Sandeshkhali Case: `ஷாஜகான் ஷேக்கைக் கைதுசெய்யுங்கள்..!' – கொல்கத்தா உயர் நீதிமன்றம்

Cycultla.jpg

மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் தன்னுடைய ஆதரவாளர்களில் சிலருடன் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். ஷாஜகான் ஷேக்-ஐ கைதுசெய்ய வேண்டும் என பா.ஜ.க தரப்பு போராட்டம் நடத்திவருகிறது.

ஷாஜகான் ஷேக்

இதற்கிடையே ரேஷன் ஊழல் வழக்கு தொடர்பாக ஜன., 5-ம் தேதி ஷாஜகானுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை, அவருடைய ஆதரவாளர்கள் தாக்கியதைத் தொடர்ந்து, ஷாஜகான் ஷேக் தலைமறைவாக இருக்கிறார் எனக் கூறப்பட்டது. இந்தப் புகார் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்தது கொல்கத்தா உயர் நீதிமன்றம். ஷாஜகானை கைதுசெய்யாமல் திரிணாமுல் காங்கிரஸ் அரசு பாதுகாப்பதாக, பா.ஜ.க குற்றம்சுமத்தி வருகிறது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “இந்த விவகாரத்தில் காவல்துறையின் கைகளை நீதிமன்றம் கட்டிப் போட்டிருக்கிறது” என விளக்கம் அளித்தார். இந்த நிலையில்தான், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “குற்றம்சாட்டப்பட்ட ஷாஜகான் ஷேக்கை கைதுசெய்ய எந்த தடையும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில், அவர் குற்றம்சாட்டப்பட்டவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். அவரைக் கைதுசெய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

அபிஷேக் பானர்ஜி

அதைத் தொடர்ந்து, சந்தேஷ்காளி விவகாரத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து, தான் கவனித்து வருவதாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர், “இது ஒரு முக்கியமான அறிக்கை. குற்றவாளியைக் கைதுசெய்ய வேண்டும், இப்போது எந்த காரணமும் சொல்ல முடியாது. ஜனநாயக ஆட்சி முறை உள்ளது, நீதிமன்றத்துக்கும் இடம் உண்டு. அதை நாம் மதிக்க வேண்டும். உடனடியாக அந்த நபர் கைதுசெய்யப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *