`ரஷ்யா சென்றதோ ஹெல்பர் வேலைக்கு; செய்வதோ போர்' – குமுறும் இந்தியர்கள்; தமிழக ஏஜென்ட்களுக்கு தொடர்பா?

Flag Of Russia 2414964 960 720.jpg

ரஷ்யாவில் ராணுவ ஹெல்பர் மற்றும் செக்யூரிட்டி வேலைக்குச் சென்றவர்கள் எல்லையில் உக்ரைன் ராணுவத்துடன் சண்டையிடும்படி நிர்ப்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசும் இதனை உறுதிபடுத்தி இருக்கிறது. குஜராத்தில் இருந்து அவ்வாறு வேலைக்குச் சென்றவர்களில் ஹமில் என்பவர் ரஷ்ய எல்லையில் நடந்த சண்டையில் டிரோன் தாக்கி உயிரிழந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த Baba Vlogs என்ற யூடியூப் சேனலில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ஏராளமானோர் ரஷ்யாவிற்கு வேலைக்குச் சென்றனர். இந்த யூடியூப் சேனலை பைஃசல் கான் என்பவர் நடத்தி வருகிறார். மகாராஷ்டிரா, குஜராத், ரஷ்யா மற்றும் சண்டிகரைச் சேர்ந்த ஏஜென்ட்டுகள்தான் 100-க்கும் அதிகமானோரை ரஷ்யாவிற்கு வேலைக்கு அனுப்பியிருக்கின்றனர்.

ரஷ்யாவில் சிக்கிய இந்தியர்கள்

அவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.2.5 லட்சத்தை ஏஜென்ட்டுகள் வாங்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த மொகமத் மொய்னுதின், தமிழகத்தைச் சேர்ந்த இருவர், சண்டிகரைச் சேர்ந்த குஷ்பிரிட், நேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் மும்பையைச் சேர்ந்த பைஃசல் கான் ஆகியோர் சேர்ந்துதான் ரஷ்யாவிற்கு ஆட்களை வேலைக்கு அனுப்பியிருப்பதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரஷ்ய எல்லையில் சிக்கிக்கொண்டவர்கள் இப்போது இந்தியாவில் உள்ள மீடியாக்களுக்கு போன் செய்து தங்களைக் காப்பாற்ற உதவும்படி கோரிக் கொண்டிருக்கின்றனர். ரஷ்ய எல்லையில் ஹெல்பர் வேலைக்குச் சென்று ராணுவத்துடன் சண்டையிடும் கர்நாடகாவைச் சேர்ந்த சமீர் அகமத் இது தொடர்பாக போன் மூலம் அளித்த பேட்டியில், “ராஜஸ்தானைச் சேர்ந்த ஹமில் டிரோன் தாக்குதலில் இறந்தபோது, நான் அருகில்தான் இருந்தேன்.

ஹமிலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 150 மீட்டர் தூரத்தில்தான் நான் இருந்தேன். கடவுள் கருணையால் நான் உயிர் தப்பினேன். அந்த இடத்தில் இருந்து 23 பேரின் உடல்களை எடுத்து வாகனத்தில் ராணுவ முகாம்களுக்கு அனுப்பி வைத்தேன். இப்போது எங்களுக்கு சில நாள்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். எங்களை மீட்கவில்லையெனில், மீண்டும் எங்களை போரிட எல்லைக்கு கொண்டு சென்றுவிடுவார்கள். இந்திய அரசு எங்களை விரைந்து மீட்கவேண்டும். எங்களை இந்த மாதிரியான வேலைக்கு அனுப்பிய ஏஜென்ட்டுகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

Baba Vlogs யூடியூப் சேனலில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, ரஷ்யாவில் வேலைக்குச் சென்ற மும்பையைச் சேர்ந்த இலியாஸ் உசைன் மும்பையில் உள்ள மீடியா அலுவலகத்திற்கு போன் செய்து பேசுகையில், “ஏஜென்ட்டுகள் எங்களை தவறாக வழிநடத்தினர். நான் எல்லையில் இருந்து 60 மீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் இருக்கிறேன். இந்திய தூதரகத்திடமிருந்து இன்னும் எந்தவித உதவியும் கிடைக்கவில்லை” என்று குறைபட்டுக்கொண்டார். இந்தியாவிலிருந்து ஆட்களை வேலைக்கு அனுப்பியதில் முக்கியப் பங்கு வகித்த மொகமத் மொய்னுதின் இது குறித்துப் பேசுகையில், “என்மீதான குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.

ரஷ்யா

கடந்த இரண்டு மாதங்களாக ரஷ்யாவில் சிக்கியிருப்பவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ரஷ்யாவிற்கு வேலைக்கு அனுப்பும்போதே வேலையில் இருக்கும் ஆபத்துகள் குறித்து எடுத்துக்கூறினோம். ராணுவ உதவியாளர் வேலையில் ஏற்றி இறக்கும் வேலைகள் இருக்கும் என்று சொல்லித்தான் அனுப்பி வைத்தோம். அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டுதான் வேலைக்கு சென்றார்கள்” என்றார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த ஏஜென்ட்டுகள் ரஷ்ய ராணுவ உடையில் தங்களது புகைப்படங்களை அனுப்பி, `நாங்களும் ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களாகத்தான் வேலை செய்கிறோம்’ என்று வேலை கேட்டு வந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். வேலை கேட்டு வருபவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இது போன்று செய்துள்ளனர். இதே ஏஜென்ட்டுகள் நேபாளத்தில் இருந்தும் ஆட்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *