மூன்றாவது அணிக்கு வேகம் காட்டும் பாஜக; கைகோத்த ஜி.கே.வாசன் – எந்த அளவுக்குச் சாத்தியப்படும்?

565f5f86 B205 45d3 962d 1f94b41b3d8c.jpg

நான்கு ஆண்டுக்காலப் பயணத்துக்குப் பிறகு, பா.ஜ.க-வுடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்துக்கொண்டது. பா.ஜ.க-வைச் சேர்ந்த பெரும்பான்மையான நிர்வாகிகள் அ.தி.மு.க-வுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று விரும்பும் நிலையில், தனித்து நின்றால்தான் பா.ஜ.க பலம் பெறும் என்ற தனது நிலைப்பாட்டில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதியாக இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

அதற்காகவே, அ.தி.மு.க-வுடன் தொடர்ந்து உரசல்களை ஏற்படுத்தி, கூட்டணி முறிவுக்கு வழிவகுத்தார் அண்ணாமலை. கூட்டணி பணால் ஆகிவிட்டது என்றாலும், அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர மாட்டோமா என்ற ஏக்கத்தில் பெரும்பாலான பா.ஜ.க நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

அதனால்தான், பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் மீண்டும் மீண்டும் சொல்லிவரும் நிலையில், அது குறித்து எந்த கருத்தையும் சொல்லாமல் பா.ஜ.க நிர்வாகிகள் மௌனம் காத்துவருகிறார்கள். கூட்டணி கதவுகள் திறந்தே இருப்பதாக மத்திய உள்துறை அமித் ஷா சிக்னல் கொடுத்தும், அ.தி.மு.க அதைக் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அண்ணாமலை

ஆனால், அண்ணாமலையைப் பொறுத்தளவில், தனி ரூட் போடுவதில் குறியாக இருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைமையில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் அவர் தீவிரம் காட்டிவருகிறார். ஏற்கெனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா-வும், கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகமும் பா.ஜ.க கூட்டணியில் நீடிக்கும் என்பது முடிவாகிவிட்டது. அதேபோல பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரையும் பா.ஜ.க குழு சந்தித்துப் பேசியிருக்கிறது. கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் முடிவை அறிவிக்கப்போவதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியிருக்கிறார்.

அண்ணாமலை என்னதான் முயற்சி மேற்கொண்டாலும், 2014 மக்களவைத் தேர்தலைப் போன்ற கூட்டணி அமைய இந்த முறை வாய்ப்பே இல்லை. அப்போது, விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க உயிர்ப்புடன் இருந்தது. அது, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தது. அதுபோக, ம.தி.மு.க., பா.ம.க., ஐ.ஜே.கே., கொ.ம.தே.க ஆகிய கட்சிகளும் அதில் சேர்ந்தன. அந்தக் கூட்டணி, இரண்டு மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றது.

ராமதாஸ் – அன்புமணி

தற்போது, பா.ம.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க முயல்கிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர் தோல்விகளைச் சந்தித்திருக்கிற இந்த இரு கட்சிகளும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமன்றி, 2026-ல் நடைபெறவிருக்கிற சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றியைப் பெற வேண்டும் என்று நினைக்கின்றன.

ஆகவே, மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது என்பதற்காக, பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்தால் தங்கள் எதிர்காலம் மோசமாகிவிடும் என்ற அச்சம் இந்த இரு கட்சிகளுக்கும் இருக்கவே செய்யும். அப்படியிருக்கும்போது, எப்படி இவர்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணி சேருவார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தேமுதிக – பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்துவிட்டது என்று அதன் தலைவர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பயணத்தால், தமிர்நாட்டில் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் இரட்டை இலக்கத்தை எட்டும் என்றும் கூறிவரும் அவர்கள், 15 சதவிகிதத்துக்கு குறையாமல் பா.ஜ.க வாக்குகள் பெறும் என்று அடித்துச்சொல்கிறார்கள். இதை நம்பி, பா.ம.க., தே.மு.தி.க போன்ற கட்சிகள் பா.ஜ.க கூட்டணியில் சேருமா என்பது தெரியவில்லை.

வேண்டுமானால், வேறு ‘கணக்கு’களின் அடிப்படையில் பா.ஜ.க-வுடன் இந்தக் கட்சிகள் கூட்டணி சேரலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பா.ஜ.க கூட்டணிக்கு யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்பது இன்றுவரை உறுதியாகவில்லை. இந்த நிலையில், ஜி.கே.வாசன் இன்று (பிப்.26) அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் த.மா.கா இடம்பெறுகிறது. வரும் நாள்களில் இந்தக் கூட்டணியில் பல கட்சிகள் சேரவிருக்கின்றன. தொகுதிப் பங்கீடும் விரைவில் இறுதிசெய்யப்படும்’ என்று ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஜி.கே.வாசனைச் சந்தித்தார் அண்ணாமலை.

ஜி.கே.வாசன்

2019 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்ற ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர்.நடராஜன், தி.மு.க வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திடம் தோற்றுப்போனார். அதையடுத்து, ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி தரப்பட்டது. அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே மீண்டும் இணைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி, அதில் தோல்வியடைந்த ஜி.கே.வாசன், தற்போது பா.ஜ.க கூட்டணியில் முதல் போனியாகியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *