சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ‘ஸ்பாஞ்ச் பார்க்’ – அறிவிப்பும் தற்போதைய நிலையும்!

Fsd65huayaey117.jpeg

`பெருநகர சென்னை மாநகராட்சி வெள்ள தடுப்புப் பணியாக மழை காலங்களில் மழைநீர் சேகரிக்கும் குளமாகவும் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கவும், குளங்கள் மற்றும் பூங்காக்களில் Sponge park அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024-25

மழைநீர் வடிகால் துறை சார்ந்த பட்ஜெட்டில், `2024-25 ஆம் ஆண்டில் மண்டலம் 2, மாத்தூர் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள குளத்தினை பரிச்சார்த்த முறையில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் Sponge park-ஆக வடிவமைக்கப்படும். இதனால் மழை காலங்களில் மழைநீர் சேகரிக்கும் குளமாகவும் சுற்றியுள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரவும், இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவதும் தவிர்க்கப்படும். மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களில் Sponge park அமைக்க ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து Sponge park அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் ஸ்பாஞ்ச் பார்க் என்றால் என்ன? வெள்ள நீரை உறிஞ்சுவதில் அதன் முக்கியத்துவம் என்ன? சென்னை மாநகராட்சியின் செயல் திட்டம் என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்.

பூங்காக்களில் குட்டைகளைத் தோண்டி, மழை வெள்ளநீரை குட்டைக்குள் சேமித்து, அதை பூமிக்கடியில் உட்செலுத்துவதுதான் `ஸ்பாஞ்ச் பார்க்’ திட்டமாகும். இந்தக் குட்டைகளின் அடிப்பகுதியில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளில் வடிவமைப்பதைப் போல மணல், கூழாங்கற்கள், ஜல்லி போன்றவை 4 அடுக்குகள் வரை கொட்டி அமைக்கப்படும். அதற்கிடையில் சுத்திகரிப்பு குழாய்களும் பொருத்தப்படும். அதன்மூலம், குட்டையில் சேகரமாகும் நீர் பூமிக்குள் உறிஞ்சப்படும். எவ்வித கான்கிரீட் கட்டுமானங்களும் இல்லாத ஒரு செயற்கை சதுப்பு நிலத்தைப் போல இருப்பதால், இது மழைநீரை சேகரிப்பதோடு, நகரங்களில் தேங்கிநிற்கும் வெள்ளநீருக்கான பிரத்யேக வடிகாலாகவும் அமைந்து விடுகிறது.

ஸ்பாஞ்ச் பார்க் திட்டம்

நீரை எப்படி பஞ்சு உறிந்துகொள்கிறதோ, அதேபோல பூங்காக்களில் அமைக்கப்படும் இந்த குட்டைகளும் மழைநீரை உறிஞ்சும். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், பூங்காக்களில் சிறிய குளம் அமைத்து, நிலத்தடி நீரை சேகரித்து நீர் வளத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டம். எனவேதான் இதை `ஸ்பாஞ்ச் பார்க்’ என்கிறார்கள். இந்த திட்டம் முதன்முதலில் சீனாவில் அமல்படுத்தப்பட்டு, அங்குதான் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

ஸ்பாஞ்ச் பார்க் திட்டம்

மக்கள்தொகை அதிகரிப்பு, நகரமயமாக்கல், கட்டற்ற கட்டுமானங்கள் போன்றவற்றின் விளைவுகளால் சென்னை மாநகரம் கான்கிரீட் காடாகவே மாறிவிட்டது. வீடுகள் முதல் சாலைகள் வரை காணும் அனைத்து இடங்களும் கான்கிரீட் தளங்களால் சமன்செய்யப்பட்டுவிட்டன. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் மண்ணில் ஊடுருவும் வாய்ப்பு குறைந்து, சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் வெள்ளநீராக ஓடுவதும் தேங்குவதுமாக இருந்துவருகிறது. இவற்றைத் தடுக்கவும், வெள்ளநீரை விரைவாக வடியச்செய்யவும், நிலத்தடி நீரைப் பெருக்குவதற்காகவும் சென்னையில் உள்ள அனைத்துப் பூங்காக்களிலும் `ஸ்பாஞ்ச் பார்க்’ அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.

ஸ்பாஞ்ச் பார்க் திட்டம்

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி, கடந்த ஆண்டு சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.7.67 கோடி ஒதுக்கீடு செய்து, சுமார் 57 இடங்களில் ஸ்பாஞ்ச் பார்க் அமைக்க முடிவு செய்தது. முதல்கட்டமாக சென்னை பெரம்பூரில் உள்ள முரசொலி மாறன் பூங்காவில் வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா, வேப்பேரி மைலேடீஸ் பூங்கா, ஜெர்மையா பூங்கா, கொளத்தூர் வி.வி.நகர் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, கொரட்டூர் பெரியார் நகர் பூங்கா, சூளைமேடு கில் நகர் பூங்கா, நந்தனம் டர்ன்ஸ் புல் பூங்கா, மாதம்பாக்கம் பிருந்தாவன் நகர் பூங்கா, மணப்பாக்கம் பெல் நகர் பூங்கா, திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பூங்கா, தலைமை செயலக காலனியில் உள்ள சிறுவர் பூங்கா, தரமணி பாரதி நகர் பூங்கா, மாத்தூர் எம்எம்டிஏ பூங்கா, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்பாஞ்ச் பார்க் அமைக்கும் வேலைகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பெருமழை காலங்களில் இது குறிப்பிட்ட அளவுக்கு நீரை நிலத்தடியில் சேர்க்கும் என்பதால் நகரின் அனைத்துப் பகுதிகளும் இதனை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *