OBC Politics: காங்கிரஸ் Vs பாஜக… வலுக்கும் ‘சாதி’ அரசியல் மோதல்!

Untitled 2a.jpg

‘நான், சிறு வயதில் டீ விற்றவன்’ என்று பிரதமர் மோடி அடிக்கடி கூறுவதுண்டு. அதுபோல, ‘நான் ஓ.பி.சி வகுப்பைச் சேர்ந்தவன்’ என்றும் அவர் அடிக்கடி சொல்வார். இந்த நிலையில், ‘இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம்’ மேற்கொண்டுவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி ஓ.பி.சி சமூகத்தில் பிறந்தவர் அல்ல’ என்று சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பினார்.

ராகுல் காந்தி நடைப்பயணம்

இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின்போது ஒடிசாவில் மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, ‘நான் ஓ.பி.சி சமூகத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லி, நாட்டு மக்களை பிரதமர் மோடி ஏமாற்றிவருகிறார்’ என்றார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் சாதி குறித்து விவாதம் கிளம்பியது. பிரதமரின் சாதி குறித்து பேசியதற்காக ராகுல் காந்திக்கு பா.ஜ.க-வினர் கண்டனம் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பா.ஜ.க அரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்தக் கூட்டத்தொடரின்போது, குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய பிரதமர், காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது, ‘காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசும், ஓ.பி.சி சமூகத்தினருக்கு நீதியை வழங்கவில்லை’ என்றார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி

மேலும், ‘சமீபத்தில், பீகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவர், 1970-ம் ஆண்டு, பீகார் முதல்வராக ஆனார். அதை, காங்கிரஸால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஓ.பி.சி-யைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் ஆட்சியில் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் எண்ணிக்கொண்டிருந்தது’ என்று குறிப்பட்ட பிரதமர் மோடி, தன்னைக் குறிப்பிட்டு, ‘இங்கு ஒரு மிகப்பெரிய ஓ.பி.சி இருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லையா?’ என்றார்.

இந்த நிலையில்தான், ‘பிரதமர் மோடி ஓ.பி.சி சமூகத்தில் பிறக்கவில்லை’ என்ற விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்பினார். 2014-ம் ஆண்டிலும்கூட, ‘மோடி ஓ.பி.சி அல்ல’ என்று காங்கிரஸ் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை பா.ஜ.க-வினர் ராகுல் காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி

பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினரான நர்ஹரி அமின், ‘1994-ம் ஆண்டு குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, நான் துணை முதல்வராக இருந்தேன். அப்போது, மோத் – கான்ச்சி சமூகத்தை ஓ.பி.சி-யாக மாற்றியதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஓ.பி.சி சமூகத்தை அவமதிப்பதை ராகுல் காந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். சொல்வாக்குமிக்க நம் பிரதமரை நோக்கிய வெறுப்பு நிறைந்த பேச்சுக்காக குஜராத் மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.

‘1994-ம் ஆண்டு குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, நான் துணை முதல்வராக இருந்தேன். அப்போது, மோத் – கான்ச்சி சமூகத்தை ஓ.பி.சி-யாக மாற்றியதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது’ என்று பா.ஜ.க எம்.பி நர்ஹரி அமின் கூறியதைக் குறிப்பட்டு, ‘மோடி பிரதமராக ஆவதற்கு முன்பு அவரது சாதி ஓ.பி.சி-யாக மாற்றப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை பா.ஜ.க தலைவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.

இதனிடையே மோடி ஓ.பி.சி சமூகத்தில் பிறக்கவில்லை என்ற உண்மையைச் சொன்னதற்காக பா.ஜ.க தலைவர்களுக்கு நன்றி’ என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி

மேலும், ‘மோடி, ஓ.பி.சி சமூகத்தில் பிறக்கவில்லை. ஆனால், காகிதத்தில் மட்டுமே அவர் ஓ.பி.சி-காக இருக்கிறார். அவர், ஓ.பி.சி கிடையாது. மோடி பிறந்து ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னரும்கூட, அவர் ஓ.பி.சி-யாக இருக்கவில்லை’ என்று ட்வீட் செய்திருக்கிறார் ராகுல் காந்தி.

பதிலுக்கு, ‘ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களுடைய சாதியையும், மதத்தையும் குறிப்பிடுவார்களா?’ என்று கேட்டிருக்கிறார் பா.ஜ.க எம்.பி-யான ஹர்நாத் யாதவ்.

‘பிரதமர் மோடி ஓ.பி.சி சமூகத்திலிருந்து வந்தவர் என்பதை  காங்கிரஸால் சகித்துக்கொள்ள முடியவிலலை. காங்கிரஸின் டி.என்.ஏ-வே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது. ராகுல் காந்தியின் பேச்சை இந்திய மக்கள் ஒருபோதும் பொருட்படுத்தமாட்டார்கள். அவரே காங்கிரஸ் கட்சியைத் துடைத்தெறிந்துவிடுவார்’ என்கிறார்கள் பா.ஜ.க தலைவர்கள்.

மோடி – ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின்போது, கான்பூரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் பா.ஜ.க-வையும் மீண்டும் விமர்சித்திருக்கிறார். ‘மோடியின் ராமராஜ்ஜியத்தில் தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வேலை கிடைக்காது. ஊடகங்களிலும், தொழில்துறையிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வர்க்கத்திலும் தலித்துகளும், ஓ.பி.சி சமூகத்தினரும் பிரதிநிதித்துவம் இல்லை.

ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 90 சதவிகிதம் இருக்கக்கூடிய தலித்துகளுக்கும், ஓ.பி.சி சமூகத்தினருக்கும் போதுமான வேலைவாய்ப்புகளை பா.ஜ.க அரசு ஏற்படுத்தவில்லை. ராமராஜ்ஜியத்தில் அவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்கள். இது என்ன மாதிரியான ராமராஜ்ஜியம்?’ என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

அயோத்தி ராமர் கோயில்

மேலும், ‘சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்திவருகிறார். அந்த கணக்கெடுப்புதான், ஓ.பி.சி மக்கள் எந்த நிலையில் வாழ்கிறார்கள், அவர்களின் பொருளாதாரம் எந்தளவுக்குஇருக்கிறது என்பதை தெரிவிக்கும். இந்தியா முன்னேறுவதற்கான மிகப்பெரிய புரட்சிகர நடவடிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்புதான் இருக்கும்’ என்றார் ராகுல்.

அயோத்தியில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு பட்டியலின, ஓ.பி.சி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படவில்லை என்றும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை உள்ளே அனுமதிக்கவில்லை என்றார். அதோடு, ‘அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள்தான் அழைக்கப்பட்டார்கள்’ என்றார் ராகுல் காந்தி.

ஐஸ்வர்யா ராய்

குடியரசுத் தலைவர் ஏன் அழைக்கப்படவில்லை. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏன் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்ற விமர்சனங்களை விட்டுவிட்டு, ‘ஐஸ்வர்யா ராய் அங்கு வரவே இல்லை. பிறகு எப்படி ஐஸ்வர்யா ராய் அழைக்கப்பட்டார் என்று ராகுல் காந்தி சொல்லலாம்?’ என்று விவாதத்துக்கு அழைக்கிறார்கள் பாஜகவினர்,

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், இன்னும் என்ன என்ன விஷயங்கள் எல்லாம் களத்துக்கு வருமோ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *