`8 தொகுதிகளில் சிக்கல்..!' உத்தவ் தாக்கரேயிடம் போனில் பேசிய ராகுல் – வேகம் காட்டும் காங்கிரஸ்!

Sonia Uddav.jpg

காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடனான தொகுதி பங்கீட்டை முடித்துக்கொண்டுள்ளது. அதோடு ஆம் ஆத்மி கட்சியுடனும் பெரும்பாலான மாநிலங்களில் குறிப்பாக டெல்லி, கோவா, குஜராத் மற்றும் ஹரியானாவில் தொகுதி பங்கீட்டை இறுதி கட்டத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. பஞ்சாபில் மட்டும் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்காமல் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்த முதல்வர் மம்தா பானர்ஜியும் இப்போது இறங்கி வந்திருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த கட்டமாக மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீட்டை முடிக்கும் வேலையில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்துவிட்டது. அதனால் வலுவான வேட்பாளர்கள் இக்கட்சிகளுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் எதிர்க்க்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி மற்றும் சிவசேனா(உத்தவ் அணி) இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மூன்று கட்சிகள் இடையே 40 தொகுதியில் பங்கீடு முடிந்துவிட்டது. 8 தொகுதியில் மட்டும் இழுபறி நீடிக்கிறது என்கிறார்கள்.

மும்பையில் காங்கிரஸ் மூன்று தொகுதியில் போட்டியிட விரும்புகிறது. ஆனால் உத்தவ் தாக்கரே இரண்டு தொகுதிகள்தான் மும்பையில் கொடுப்போம் என்று கூறிக்கொண்டிருக்கிறார். இதையடுத்து இப்பிரச்னைக்கு தீர்வு காண ராகுல் காந்தி போன் மூலம் உத்தவ் தாக்கரேயுடன் பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசியதாகவும் உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தவ் தாக்கரே – சரத் பவார்

மும்பையில் தென் மத்திய மும்பை, வடமத்திய மும்பை, வடமேற்கு மும்பை தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது. சிவசேனாவும் தென்மத்திய மும்பை, வடமேற்கு மும்பை தொகுதி உட்பட 18 தொகுதிகள் வேண்டும் என்று விரும்புகிறது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரேயுடன் ராகுல் காந்தி நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவசேனா 22 தொகுதியில் போட்டியிட்டு 18 தொகுதியில் வெற்றி பெற்றது. அதில் 15 எம்.பி.க்கள் கட்சி உடைந்த போது ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சென்றுவிட்டனர். மற்றொரு புறம் சரத்பவார் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கேயும் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகின்றனர். சரத் பவார் அணி அதிக பட்சமாக 8 தொகுதியில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *