மேயர் தேர்தல் தில்லாலங்கடி: தன் அதிகாரத்தைப் பயன்படுத்திய நீதிமன்றம் – பிரிவு 142 சொல்வதென்ன?!

Untitled Design 68 .jpg

யூனியன் பிரதேசமான சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தல் மோசடி விவகாரம், இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அதனை சரிசெய்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சி மாமன்றத்தில், ஆம் ஆத்மி கட்சி 13 உறுப்பினர்களையும், காங்கிரஸ் ஏழு உறுப்பினர்களையும், பா.ஜ.க 14 உறுப்பினர்களையும், அகாலிதளம் ஓர் உறுப்பினரையும் கொண்டிருக்கின்றன.

சண்டிகர் மேயர் தேர்தல் கடந்த ஜனவரி மாதம்10-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், சண்டிகர் மக்களவைஎம்.பி-க்கு வாக்களிக்க உரிமை உண்டு. நியமன உறுப்பினருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை.

சண்டிகர் மேயர் தேர்தல்

மேயர் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குல்தீப் குமார் நிறுத்தப்பட்டார். ஆம் ஆத்மியின் 13 உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் ஏழு உறுப்பினர்கள் என மொத்தம் 20 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், குல்தீப் குமார்தான் வெற்றிபெறுவார் என்பது உறுதியாகியிருந்தது.

ஆனால், 16 வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஆம் ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியடைந்தது. தேர்தல் அதிகாரியாக செயல்பட்டவர், நியமன உறுப்பினரான அனில் மாசிஹ். ஆம் ஆத்மியின் எட்டு வாக்குகள் செல்லாதவை என்று கூறிவிட்டு, பா.ஜ.க வேட்பாளர் வெற்றிபெற்றதாக அவர் அறிவித்தார்.

சண்டிகர் மேயர் தேர்தல்: மனோஜ் சோன்கர் – குல்தீப் குமார்

ஆனால், வாக்குச்சீட்டுகளில் அனில் மாசிஹ் திருத்தங்கள் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் மூலமாக, சண்டிகர் மேயர் தேர்தலில் நடைபெற்ற முறைகேடு பெரும் சர்ச்சையாக மாறியது. அந்தத் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பா.ஜ.க வேட்பாளரின் வெற்றி செல்லாது என்று கூறியதுடன், ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றிபெற்றார் என்று அறிவித்திருக்கிறது.

உண்மையில், 20 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்த ஆம் ஆத்மி வேட்பாளர்தான் வெற்றிபெற்றார். ஆனால், வாக்குச்சீட்டுகளைத் திருத்தி, அவற்றை செல்லாததாக்கி, பா.ஜ.க வேட்பாளர் வெற்றிபெற்றதாக மோசடியாக அறிவித்தார் தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட நியமன உறுப்பினர். அவருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மறுதேர்தல் என்ற பேச்சுக்கு இடம் தராமல், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சந்திரசூட் கறாரான தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்று பல தரப்பினரும் பாராட்டுகிறார்கள்.

தலைமை நீதிபதி சந்திரசூட்

கிரிமினல், சிவில் சட்டங்களில் வழிமுறைகள் இல்லாமல் இருந்தால், நியாயத்தை நிலைநாட்டுவதற்காக தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 142 வழங்கியிருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான், இப்படியொரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142ன் கீழ் இந்திய உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகார வரம்பைப் பயன்படுத்தி, எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது அதன் முன் நிலுவையில் உள்ள வழக்கு விஷயத்தில் முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான ஆணையை அல்லது உத்தரவை பிறப்பிக்கலாம்.

‘இது எவ்வளவு பெரிய மோசடி! அதிகாரத்தைக் கைப்பற்ற பா.ஜ.க எப்படியெல்லாம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதற்கு சண்டிகர் மேயர் தேர்தல் மிகச் சிறந்த உதாரணம்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

சண்டிகர் மேயர் தேர்லில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா. அந்த பதிவை இப்போது டேக் செய்து ‘மன்னிப்பு கோருங்கள் நட்டா’ என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி-யான பிரியங்கா சதுர்வேதி.

பிரியங்கா சதுர்வேதி

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க பா.ஜ.க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜெ.பி.நட்டாவுக்கு ‘ட்வீட் பரிந்துரை’ என்று குறிப்பிட்டு, ‘மேயர் தேர்தலில் மோசடி செய்ததற்காக சண்டிகர் மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஜனநாயகத்தைச் செயலிழக்கச் செய்வதற்கான சாதனை முயற்சிகளை இந்தியா கண்டுவருகிறது. பா.ஜ.க-வின் மோசடி கணக்கு முடிவுகளுக்கு மத்தியில் இந்தியா கூட்டணி தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது’ என்று பதிவிடுமாறு பிரியங்கா சதுர்வேதி கேலி செய்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *