மேம்பாட்டு நிதி: `மேயருக்கு 3 கோடி; எங்களுக்கு 45 லட்சமா?'- சென்னை மாநகராட்சியில் அனல் பறந்த விவாதம்

Bb902cc0 88ed 4399 A135 082ac1459267.jpeg

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் கூட்டம் நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று (22.02.2024) மாமன்றக் கூட்டத்தில் வரவு செலவு திட்டத்தின்மீதான விவாதம் நடைபெற்று, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் 2024-25 சென்னை மாநகராட்சி பட்ஜெட் தொடர்பாகவும், தங்கள் வார்டுகளிலுள்ள பிரச்னைகள் தொடர்பாகவும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து நிலைக்குழு, மண்டலக்குழு தலைவர்கள் உள்ளிட்ட கவுன்சிலர்கள் உரையாற்றினர்.

சென்னை மாநகராட்சிக் கூட்டம்

`மேயருக்கு 3 கோடி! எங்களுக்கு மட்டும் 45 லட்சமா?’ – அனல் பறந்த விவாதம்:

மாமன்றக் கூட்டத்தில் முதலாவதாகப் பேசிய (நகர திட்டமிடல் ) நிலைக்குழுத் தலைவர் இளைய அருணா, “சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயருக்கான சிறப்பு மேம்பாட்டு நிதி 50% அதிகரிக்கப்பட்டு ரூ.2 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், எங்களுக்கு ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக மட்டுமே உயர்த்தியிருக்கிறார்கள். எங்களுக்கும் 50% நிதி உயர்வு வேண்டும்!” எனக் கொளுத்திப் போட்டார். அதைத் தொடர்ந்துப் பேசிய (பணிகள்) நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, “இந்த ஆண்டு ரூ.40 லட்சமாக இருந்த வார்டு கவுன்சிலர்களின் மேம்பாட்டு நிதியை ரூ.45 லட்சமாக உயர்த்தியிருக்கிறீர்கள். இது குறைவுதான் என்றாலும், அடுத்தமுறை ரூ.75 லட்சமாக உயர்த்துங்கள்” என கேட்டுக்கொண்டார். அதேபோல, (கல்வி) நிலைக்குழுத் தலைவர் விஸ்வநாதன், “மேயருக்கான நிதி ரூ.2 கோடியிலிருந்து ரூ.3 கோடி ஆகும்போது, வார்டு கவுன்சிலர்களுக்கான நிதி ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.60 லட்சமாக ஆகக்கூடாதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மண்டலக்குழுத் தலைவர் நொலம்பூர் ராஜன், “மேயருக்கு ரூ.3 கோடி பத்தாது… 20-க்கும் மேல் சட்டமன்றத் தொகுதிகளும் 200 வார்டுகளும் உள்ள ஒட்டுமொத்த சென்னைக்கு ஒரு மேயருக்கான நிதி இது போதுமா… அவருக்கு 3 கோடியல்ல 30 கோடி கொடுக்க வேண்டும்!” என சூசகமாகப் பேசினார். தொடர்ச்சியாக மண்டலக்குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், கவுன்சிலர்கள் என ஆளுங்கட்சியினர் மேயருக்கான ரூ.3 கோடி மேம்பாட்டு நிதி குறித்தே பேசி, எங்களுக்கும் 60 லட்சம், 75 லட்சம், ரூ.1 கோடி வேண்டும் என மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தனர்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

உடனே இடைமறித்துப் பேசிய மேயர் பிரியா, “கடந்த ஆண்டு கவுன்சிலர்களுக்கு ரூ.35 லட்சமாக இருந்த மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு உயர்த்தி வழங்கப்படவில்லை. நிதிப்பற்றாக்குறை என்று சொல்லிவிட்டார்கள். தொடர்ந்து கவுன்சிலர்களுக்கு இந்த முறை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக நிதி உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆரம்பம் முதலே எனக்கு ரூ.2 கோடியாகவே இருந்த மேம்பாட்டு நிதி, இப்போதுதான் ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எனக்கு ரூ.3 கோடியாக இருந்தாலும் அதை உங்கள் வார்டுகளுக்குத்தானே செலவு செய்யப்போகிறேன்!” என்று கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசினார்.

சென்னை மாநகராட்சி

அடம்பிடித்த கவுன்சிலர்கள்!

இறுதியாகப் பேசிய ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கமும், “ரூ.45 லட்சமாக உயர்த்தப்பட்ட தங்களின் மேம்பாட்டு நிதியை இன்னும் அதிகரிக்க வேண்டும். ரூ.60 லட்சமாக உயர்த்தித்தர வேண்டும். குறைந்தபட்சம் ரூ.50 லட்சமாகவாவது இந்த பட்ஜெட்டில் உயர்த்தி அறிவிப்பீர்களா?” என மேயரையும் கமிஷனரையும் பார்த்துக் கேட்டார். உடனடியாக மேயர் பிரியா, துணை மேயர் மகேஸ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சில நிமிடங்கள் கலந்தாலோசித்தனர். இதையடுத்து மேயர் பிரியா, “நிறைய மன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க கவுன்சிலர்கள் மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என அறிவித்தார். உடனடியாக அனைத்து கவுன்சிலர்களும் மேசைகளைத் தட்டி சிரித்த முகத்துடன் வரவேற்றனர்.

`தமிழ் இல்லை… தமிழில் இல்லை!’

கணக்கு தணிக்கை நிலைக்குழுத் தலைவர் க.தனசேகரன் பேசியபோது, “சென்னை மாநகராட்சி வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் ஒப்புதலுக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் கூடுதல் பொருள் நிரல், பெரும்பாலானவை ஆங்கிலத்தில் இருக்கிறது! அதை அனைத்து கவுன்சிலர்களாலும் படித்து புரிந்து கொள்ள முடியாது. எனவே அனைத்தையும் இனி தமிழில் வெளியிட வேண்டும்!” எனக் கேட்டுக்கொண்டார். அதேபோல இளைய அருணாவும், “தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி தமிழ்நாடு தமிழருக்கே என முழுக்கம் எழுப்பிய அண்ணாவின் பெயரால் அமைந்திருக்கும் அண்ணாசாலை (மவுன்ட் ரோடு) வணிக வளாகங்கள் கடைகளில் ஒன்றில்கூட தமிழ்ப் பெயர்கள் இல்லை! தமிழில் பெயர்ப்பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!” எனக் கேட்டுக்கொண்டார்.

கணக்கு மற்றும் தணிக்கை நிலைக்குழுத் தலைவர் தனசேகரன்

`கொசு, தெருநாய், மாடுகள் பிரச்னைக்குத் தீர்வே இல்லையா?’

தொடர்ந்து பேசிய மண்டலக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், “கொசு ஒழிப்பதற்காக கொசு மருந்து அடிக்கிறார்கள். ஆனால் அந்த கொசு மருந்தில் கொசுக்கள் சாவதே இல்லை. கொசு மருந்தைப் பற்றி கொசுக்கள் கவலையே படாமல் மீண்டும் வந்து கடிக்கிறது. முதலில் கொசு மருந்தை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்!” எனக் கூற, அவையில் சிரிப்பலை எழுந்தது. அதேபோல, நிலைக்குழுத் தலைவர் விஸ்வநாதன், “தெருநாய்களைப் பிடித்துச் சென்று கருத்தடை செய்து மீண்டும் அங்கேயே விடுகிறார்கள். நன்றாக இருந்த நாய்கள் கருத்தடை செய்த பிறகு உடல் முழவதும் புண்ணாகி, சொறிநாயாக மாறிவிடுகிறது. ஏன்?” எனக் கேள்வி எழுப்ப, மீண்டும் அவையில் சிரிப்பலை எழுந்தது.

சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார்

`திராவிட மாடல்’னு சொல்ல மாட்டேன்!

தொடர்ந்து பேசிய பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த், “நான் மாற்றுக்கட்சி என்பதால், சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை குறை மட்டுமே சொல்லமாட்டேன். நல்ல பட்ஜெட்தான், வரவேற்கிறேன். மற்றபடி `திராவிட மாடல்’ என்ற வார்த்தையையெல்லாம் யூஸ் பண்ண மாட்டேன்” எனக் கூறினார். உடனே ஒட்டுமொத்த தி.மு.க கவுன்சிலர்களும் கோரசாக, “அதான் இப்போ யூஸ் பண்ணிட்டீங்களே!” எனக் கூறி வாய்விட்டுச் சிரித்தனர். அதற்கு துணை மேயர் மகேஷ்குமார், “பா.ஜ.க கவுன்சிலர் நமது பட்ஜெட்டை வரவேற்றிருக்கிறார், சந்தோஷம்!” என்றார்.

அதையடுத்துப் பேசிய அ.தி.மு.க கவுன்சிலர் ஜான், “சென்னை மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான அம்மா உணவகங்களில் மிக்ஸி, கிரைண்டர் போன்ற உபகரணங்கள் இல்லை. பழுதாகி விட்டன. பல கட்டடங்களின் கூறை ஒழுகும் நிலையில் பாழடைந்து கிடக்கின்றன. நீங்கள் தனியாக நிதி ஒதுக்கவில்லை என்றாலும்கூட பரவாயில்லை, குறைந்தபட்சம் சி.எஸ்.ஆர் நிதியையாவது ஒதுக்குங்கள்!” என்றார். மேலும், “பள்ளிகளில் மாணவியர்களுக்கு நாப்கின் வழங்கப்படுகிறது. ஆனால் அவற்றை முறையாக அப்புறப்படுத்துவதற்காக `Burning Machine’ பல்வேறு மாநகராட்சிப் பள்ளிகளில் இல்லை; அவற்றை அமைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். தவிர, “கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 83 திட்டங்களில் 25 மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மீதம் 51 திட்டங்கள் ப்ராசசிங் நிலையில் இருக்கிறது. மற்ற திட்டங்கள் நிறைவேற்றபடவில்லை” என்றார்.

அ.தி.மு.க கவுன்சிலர் ஜான்

`குறைகளை அடுக்கிய அ.ம.மு.க கவுன்சிலர்; கடுப்பான தி.மு.க-வினர்!’

அதேபோல, அ.ம.மு.க கவுன்சிலர் கிரிதரனும் கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத திட்டங்களை பட்டியலிட்டுப் பேச ஆரம்பித்தார். உடனே கொதித்தெழுந்த தி.மு.க கவுன்சிலர்கள், கிரிதரனை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். மேயர் பிரியா, “இத்தனை திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம், ஆனால் நிறைவேற்றாதா ஒரு சில திட்டங்கள்தான் உங்கள் கண்ணுக்குத் தெரிகிறதா?” என கடிந்துகொண்டார். அருகிலிருக்கும் மற்றொரு தி.மு.க நிலைக்குழுத் தலைவர், “பாராட்டி மட்டும் பேசுப்பா” எனக் கூறினார். ஆனால், தொடர்ந்து குறைகளைப் பட்டியலிட்டார் கிரிதரன். இதனால் எரிச்சலடைந்த தி.மு.க கவுன்சிலர்கள், ஆளுக்காள் எழுந்து கேள்வி எழுப்பியும் பதிலளித்தும் பேச ஆரம்பித்தனர். இதையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த மேயர் பிரியா, “மன்றத்தை யார் நடத்துறது… நீங்களே நடத்துறீங்களா? நான் அமைதியாகிவிடவா?” என சத்தமாக கேட்க, அவை அமைதியானது. இறுதியாக, வேறு வழியின்றி அ.ம.மு.க கவுன்சிலர் பட்ஜெட்டை பாராட்டி சில வார்த்தைகள் பேசி அமர்ந்தார்.

அ.ம.மு.க கவுன்சிலர் கிரிதரன்

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து கட்சி கவுன்சிலர்களும் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை ஒருமனதாக வரவேற்று பேசினர். குறிப்பாக, பெண்களுக்கான தனி உடற்பயிற்சி கூடத்துக்கு பெண் கவுன்சிலர்கள் பலரும் நேர்மறையான கருத்துகளைப் பதிவுசெய்தனர். இறுதியாக, பொருள் எண்: 31 மின்சார வாரிய தெருவிளக்குகள் தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு 30 மாதங்கள் கால அவகாசம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவை மீண்டும் கால அவகாசம் 1 வருடம் என திருத்தியமைக்கப்பட்டு, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *