“ஒரு கட்சி ஒரு குடும்பத்தின் கைக்கு போய்விடுவதுதான் வாரிசு அரசியல்..!” – எடப்பாடி பழனிசாமி

65d517cfa7fa5.jpg

“நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைந்துவிட்டதா?” என்ற கேள்விக்கு,

“திமுகவில் மட்டும் கூட்டணி அமைத்துவிட்டார்களா? பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை முடிந்தால்தான் உறுதி, அதில் எத்தனை கட்சிகள் வெளியேறுகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

இரட்டை இலைச்சின்னம் முடக்கப்படும் என்று ஓபிஎஸ் கூறுவது வேடிக்கையாக உள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, தேர்தல் ஆணைய உத்தரவையும் கொடுத்து விட்டோம். எப்படி சின்னத்தை முடக்க முடியும்? அவர் ஆசை நிராசையாக முடியும். ஓபிஎஸ் காரில் அதிமுக கொடியை பயன்படுத்தினால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும்.

பாமக, தேமுதிக கூட்டணிக்கு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை, அறிவித்த பின்புதான் கூட்டணி முழுமையாகத் தெரியும்.” என்றவர் தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது,

“அதிமுகவினர் பாஜக-வில் இணைவதை சொல்கிறீர்கள். பாஜகவில் உள்ள அதிகமானோர் அதிமுகவில் இணைவதை சொல்ல மாட்டீர்கள், ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு போவது அவர்களுடைய ஜனநாயகம்,  இது ஜனநாயக நாடு ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு போகிறார் என்றால் அது அவர்களின் மனநிலையை பொறுத்தது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

திமுக-வில் கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின், அதற்குப் பின்பு உதயநிதி ஸ்டாலினை தலைவராக்க முயற்சி செய்கிறார்கள். இதுதான் வாரிசு அரசியல், அதிமுக-வில் வாரிசு அரசியல் இல்லை, ஒரு கட்சி ஒரு  குடும்பத்தின் கைக்கு போய்விடுவதுதான் வாரிசு அரசியல். அதிமுக-வில் என்னைப் போன்ற சாதாரண தொண்டர்கள் உயர்நிலைக்கு வர முடியும், வேறு எந்த கட்சியினாலும் முடியாது. திமுக-வை பொருத்தவரை அது வாரிசு கட்சி, குடும்ப கட்சி, அது கட்சியே அல்ல, கார்ப்பரேட் கம்பெனி.” என்றவர்,

தொடர்ந்து, “ஒரே நாடு, ஒரே தேர்தல் விஷயத்தில் எங்கள் கொள்கைப்படி கருத்துக்களை தெளிவாக சொல்லி விட்டோம், கருத்து கேட்கும் கமிட்டிக்கு பதில் அனுப்பி உள்ளோம். அதிமுக கருத்துக்களை ஏற்றுக் கொண்டால் நாங்கள் ஆதரிப்போம். இல்லையென்றால் நிராகரிப்போம்.

ஒடிசா, தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்காளத்தில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி யாரும் வெற்றி பெறவில்லை. இவ்வள்வு ஏன், 2014-ல் பிரதமர் வேட்பாளரை ஜெயலலிதா முன் நிறுத்தவில்லை. தமிழ்நாட்டு மக்கள்தான் எங்கள் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். எங்களுக்கு யார் வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் எஜமானர்கள். கூட்டணி என்று வரும்போது கூட்டணி தர்மமும் வந்து விடுகிறது. மாநிலத்திற்கு எதிரான செயல் வரும்போது தேசிய அளவில் முடிவு எடுக்கிறார்கள் அப்போது நாம் பாதிக்கப்படுகிறோம். இந்த நிலை மாறுவதற்குத்தான், அதிமுக சுயமாக முடிவெடுத்து செயல்படுவதற்குத்தான், தேசியக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டோம். எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு வாக்காள பெருமக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் அதுதான் எங்களின் நிலைப்பாடு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *