`17 தொகுதிகள் ஒதுக்கலாம்'- சீட் பகிர்வு ஃபைனல் செய்த அகிலேஷ்?- ராகுல் யாத்திரையில் பங்கேற்க நிபந்தனை

An9ji128 Akhilesh Yadav 625x300 13 November 23.webp.png

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. ஒரு புறம் காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். மற்றொரு புறம் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாகக் கூறிக்கொண்டிருக்கின்றன. மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடப்போவதாகக் கூறிவிட்டார். நிதிஷ் குமார் கூட்டணியை விட்டு விலகி, பா.ஜ.க-வோடு ஐக்கியமாகிவிட்டார். ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப்பில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று கூறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி வேண்டுமானால் தருகிறோம் என்ற ரீதியில், ஆம் ஆத்மி கட்சி மிரட்டிக்கொண்டிருக்கிறது. தற்போது சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்கும் முன்பு, தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துக்கொண்டிக்கிறது.

அகிலேஷ் – ராகுல்

ஒரு புறம் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசும் அகிலேஷ் யாதவ், இதுவரை 32 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்து, காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரையில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் மறுத்து வருகிறார். `முதலில் தொகுதிப் பங்கீட்டை முடியுங்கள். அதன் பிறகு யாத்திரையில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யலாம்’ என்று அகிலேஷ் யாதவ் கறாராக தெரிவித்துவிட்டார்.

இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் கொடுப்பதாகக் கூறியிருக்கிறோம். ஆனால் அவர்கள் ஒரு சில குறிப்பிட்ட தொகுதிகளைத் தங்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி ஏற்கெனவே வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளைத் தங்களுக்குக் கொடுக்கும்படி கேட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு காங்கிரஸ் ஒரு தொகுதியைக்கூட விட்டுக்கொடுக்க மறுத்தது” என்றார்.

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் வரை மட்டுமே கொடுப்போம் என்று அகிலேஷ் யாதவ் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் சமாஜ்வாடி கூட்டணியிலிருந்து ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி வெளியேறியிருப்பதால் இந்தத் தொகுதிகளின் எண்ணிக்கையை அகிலேஷ் யாதவ் 17-ஆக அதிகரித்திருப்பதாக சமாஜ்வாடி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராகுல் காந்தி

பேச்சுவார்த்தையில் நெருக்கடி கொடுத்தால் கூடுதலாக சில தொகுதிகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 20 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. ஆனால் கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட்டது. இதில் ராகுல் காந்திகூட தோல்வியைத் தழுவினார். சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றார். அதனைக் காரணம் காட்டி சமாஜ்வாடி கட்சி தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயன்று வருகிறது.

மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கட்சிக்கு சொற்ப தொகுதிகளே கிடைக்கும் அபாயம் இருந்து வருகிறது. சிவசேனா 18 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. எஞ்சி இருக்கும் 30 தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பகிர்ந்து கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஃபரூக் அப்துல்லா அறிவித்தார். இதுவும் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்து இந்தியா கூட்டணிக்கு சவால்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையில் தீவிரம் காட்டி வருவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *