Chandigarh: `வாக்குச்சீட்டுகளில் எதற்கு X குறியீடு?'- தேர்தல் அதிகாரியை விளாசிய CJI; பரபரத்த கோர்ட்!

Untitled Design 2024 02 19t183515 097.png

“ஜனவரி 30-ம் தேதி, சண்டிகர் மாநிலத்தில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் -ஆம் ஆத்மி கூட்டணியை வீழ்த்தி, பா.ஜ.க வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரி அனில் மஸ்ஹி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில், தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி, வாக்களிக்கப்பட்ட வாக்கு சீட்டுகளைத் திருத்துவது பதிவாகியிருந்தது.

சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு

அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, பிப்ரவரி 5-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபடி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “வாக்குச்சீட்டுகள் திருத்தப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. இத்தகைய செயலைச் செய்த தேர்தல் அதிகாரிமீது வழக்கு தொடரப்பட வேண்டும். இந்தியாவின் ஜனநாயகம் கேலிகூத்தாக்கப்பட்டு, படுகொலைசெய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக விளக்கமளிக்க சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி, நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது . இதற்கிடையில், சண்டிகர் தேர்தலில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்ட பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

அப்போது, சண்டிகர் நிர்வாகம் சார்பில் ஆஜரான இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நீதித்துறை அதிகாரியின் மேற்பார்வையில் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்” எனப் பரிந்துரைத்தார். மனுதாரரான குல்தீப் குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குர்மிந்தர் சிங், “தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி சண்டிகர் நகராட்சியின் நியமன உறுப்பினர். அவர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர். மேலும், புதிய தேர்தல் அவசியமில்லை. தற்போதைய வாக்குச்சீட்டுகளின் அடிப்படையில் வாக்குகளை எண்ணலாம்.

விதிமுறைகளின்படி, ஒரு வாக்கு மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே செல்லுபடியாகாது. அதில் 1: இரண்டு வேட்பாளர்களுக்கு வாக்குப் பதிவானால்; 2: வாக்காளரை அடையாளம் காணும் வகையில் ஏதேனும் குறி இருந்தால்; 3: யாருக்கும் வாக்களிக்காமல் விடப்பட்டிருந்தால் அல்லது யாருக்கு வாக்களித்திருக்கிறார் என்பதை அறியமுடியாவிட்டால்… அது போன்ற வாக்குச் சீட்டுகளை மட்டும் நீக்கிவிட்டு, மற்ற வாக்குகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தேர்தல் தலைமை அதிகாரி அனில் மஸ்ஹியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அவர்களிடையே நடந்த உரையாடல் பின்வருமாறு:-

டி.ஒய்.சந்திரசூட்

நீதிபதி டி.ஒய் சந்திரசூட்: “அனில் மஸ்ஹி, நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன். நீங்கள் உண்மையாக பதிலளிக்கவில்லை என்றால், உங்கள்மீது வழக்கு தொடரப்படும்…

இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்பது உங்களுக்கே தெரியும். நாங்களும் அந்த வீடியோவைப் பார்த்தோம். அந்த வீடியோவில் வாக்குச்சீட்டுகளில் `X’ குறிவைத்து என்ன செய்து கொண்டிருந்தீர்கள்… அவை அனைத்தும் வாக்குச்சீட்டுகள்தானே?”

அனில் மஸ்ஹி: “வாக்குப்பதிவுக்குப் பிறகு, செல்லும் வாக்கு, செல்லாத வாக்கு எனத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். எனவே, வாக்குச்சீட்டை அடையாளம் வைக்கவும், தனித்தனியாகப் பிரிக்கவும் சில வாக்குச்சீட்டுகளில் X குறியிட்டேன்.”

நீதிபதி டி.ஒய் சந்திரசூட்: “குறிப்பிட்ட வாக்குச்சீட்டுகளில் X போட்டீர்களா?”

அனில் மஸிஹ்

அனில் மஸ்ஹி: “ஆம்!”

நீதிபதி டி.ஒய் சந்திரசூட்: “எத்தனை வாக்குச்சீட்டுகளில் அந்த அடையாளக் குறியைப் போட்டீர்கள்?”

அனில் மஸிஹ்: “8″

நீதிபதி டி.ஒய் சந்திரசூட்: “வாக்குச்சீட்டுகளில் ஏன் கிழித்தீர்கள்… நீங்கள் ஆவணங்களில் கையெழுத்து மட்டும்தானே போடவேண்டும்… வாக்குச்சீட்டில் மற்ற குறியீடுகளைப் போடலாம் என்ற விதி எங்கே இருக்கிறது?”

அனில் மஸ்ஹி: “வாக்குச்சீட்டுகளை வேட்பாளர்கள்தான் பிடுங்கி கசக்கி எறிந்தார்கள்… ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் சலசலப்பை உருவாக்கி, வாக்குச்சீட்டுகளைப் பறிக்க முயன்றார்கள். அதன் காரணமாக வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.”

டி.ஒய். சந்திரசூட்

நீதிபதி டி.ஒய் சந்திரசூட்: “சொலிசிட்டர் ஜெனரல், அனில் மஸ்ஹி மீது வழக்கு தொடர வேண்டும். அவர் தேர்தல் பணியில் குறுக்கிட்டிருக்கிறார். மேலும், அனில் மஸ்ஹி 8 வாக்குச்சீட்டுகளில் மட்டுமே குறியிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதை நீதிமன்றம் பதிவுசெய்து கொள்கிறது. வாக்குச்சீட்டுகள் மற்றும் வீடியோ பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது பதிவுகளை வைத்திருக்கும் சண்டிகர் துணை ஆணையர் அவற்றை இன்று மாலை 5 மணிக்குள் உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும்.”

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “நடக்கும் குதிரை பேரம் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்… வாக்குப்பதிவு தொடர்பான மனுவை வேறு நாளில் விசாரிக்க வேண்டும் என்ற மனுவை ஏற்க முடியாது. நாளை பிற்பகல் 2 மணிக்கு சர்ச்சைக்குரிய சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச்சீட்டுகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வர நீதித்துறை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.

பா.ஜ.க நிர்வாகிகளுடன் அனில் மஸ்ஹி

புதிதாக தேர்தல் நடத்தாமல், ஏற்கெனவே பதிவான வாக்குகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க தேர்தல் அதிகாரியாக எந்த அரசியல் கட்சிகளையும் சாராத ஒரு தேர்தல் அதிகாரியை நியமிக்குமாறு சண்டிகர் தேர்தல் நிர்வாகத்தின் துணை ஆணையரிடம் கேட்டுக்கொள்கிறோம். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நீதித்துறை அதிகாரி முழு வாக்கு எண்ணிக்கையையும் மேற்பார்வையிடுவார்.

வாக்குச் சீட்டுகள் முழுவதையும் வீடியோ பதிவு செய்யவேண்டும். தேர்தல் அதிகாரி, வாக்குப்பதிவை உறுதி செய்ய நியமிக்கப்படும் நீதித்துறை அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் செயல்முறையின் முழு பதிவேடு, வாக்குச்சீட்டுகள், சிசிடிவி வீடியோ உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஜனநாயகத்தைக் கொலைசெய்ய அனுமதிக்க மாட்டோம்” என உத்தரவிட்டிருக்கின்றனர்.

சண்டிகளில் கட்சி தாவிய கவுன்சிலர்கள்

இதற்கிடையில், சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியின் 3 கவுன்சிலர்கள் திடீரென பா.ஜ.க-வில் இணைந்தது, சண்டிகர் அரசியலில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *