சென்னை பல்கலைக்கழகம்: வங்கிக் கணக்குகளை முடக்கிய ஐ.டி; மாணவர்கள் போராட்டம் – என்ன நடக்கிறது?

A17b496c 16f6 4bef Bdfe 3b8eb791983a.jpg

சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நிர்வாகக் குளறுபடி நடந்து வருகிறது. அனைத்து நிர்வாகப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டு வந்தது. நிர்வாகம் சரியில்லை என்றும், அடிப்படை வசதிகள்கூட பல்கலைக்கழக வளாகத்தில் இல்லை என்றும் மாணவர்கள் சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளுக்கு விடைத்தாள் திருத்தாமல் பல மாதங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனால் மேல் படிப்பிற்கு விண்ணப்பிக்கவோ வேலைக்கோ செல்ல முடியவில்லை என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து துணை வேந்தராக இருந்த கௌரிக்கு எதிராக, மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு சில மாதங்களில் அவரின் பணிக்காலம் முடிவடைந்தது. பணிக்காலம் முடிந்து ஆறு மாதங்கள் மேலாகியும் இதுவரை, துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. மேலும் கடந்த 8 மாதங்களில் இரண்டு திருட்டு சம்பவங்கள் இங்கு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் 424 கோடி ரூபாய் வரி பாக்கியைச் செலுத்தாததால், சென்னைப் பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம்

சட்டப்படி ஒரு நிறுவனம் அதன் வருவாயில் 51%-க்கு மேல் மாநில அல்லது மத்திய அரசிடமிருந்து மானியமாகப் பெற்றால், அது அரசு நிறுவனமாகக் கருதப்பட்டு வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், ஆயிரக்கணக்கான தணிக்கை ஆட்சேபனைகளால், 2017-ல் இருந்து, தமிழக அரசிடம் இருந்து, பல்கலைக்கழகம் மானியம் பெறவில்லை. இதனால் சென்னைப்  பல்கலைக்கழகத்தை, தனியார் நிறுவனமாகக் கருதி, 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 424 கோடி ரூபாய் வரி விதித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் பேசுகையில், “வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ஆனால் வங்கிக் கணக்குகளில் உள்ள பிடியை நீக்கக் குறைந்தபட்சம் ரூ.20 கோடியை உடனடியாக டெபாசிட் செய்யுமாறு கூறுகிறார்கள். நாங்கள் அதைச் செய்யக்கூடிய நிலையில் இல்லை. பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட பிறகு, மூன்று நாள்களில் பல்கலைக்கழகம் வழங்கிய ஒரு டஜன் காசோலைகள் பவுன்ஸ் ஆகிவிட்டன. திங்கள்கிழமைக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தாவிட்டால், மின்சாரம் துண்டிக்கப்படும். அதனால் வகுப்பறைகள் மற்றும் தங்கும் விடுதிகள் இருட்டாக மாறக்கூடும். மேலும் எங்கள் வழக்கமான வேலையைச் செய்ய முடியாமல் போகலாம்” என்று தெரிவித்தார்.

“சராசரியாக, பல்கலைக்கழகத்தின் தொடர் செலவுகளை நிர்வகிப்பதற்கு மாதம் ஒன்றுக்குச் சம்பளம் ரூ.7 கோடி, ஓய்வூதியம் ரூ.8 கோடி உட்படக் குறைந்தது ரூ.18 கோடி தேவைப்படுகிறது. ஆறு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு நோபல் பரிசு பெற்றவர்களை உருவாக்கிய 166 ஆண்டுகள் பழைமையான நிறுவனம், முன்னுரிமை அடிப்படையில் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், முற்றிலும் ஸ்தம்பித்துவிடும் என்று அதிகாரிகள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். கடுமையான நிதிக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் வருவாய், உதவித்தொகை, நிதி வைப்புத்தொகையின் வட்டி மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட வைப்புத்தொகை போன்ற பிற வருமான ஆதாரங்கள் மூலம் எப்படியோ பல்கலைக்கழகத்தை இயக்கிக் கொண்டிருந்தோம். ஆனால் கணக்குகள் முடக்கப்பட்டதால், பல்கலைக்கழக செயல்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன. மேலும் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு எதுவும் இல்லை” என்று பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார். 

“தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்குத் தாய் பல்கலைக்கழகமாகச் சென்னைப் பல்கலைக்கழகம் விளங்குகிறது. உலகப் புகழ் பெற்ற‌ பல அறிவியல் அறிஞர்களையும், சாதனைகள் பல படைத்த பல பேராசிரியர்களையும் ஆய்வாளர்களையும் தனது நீண்ட நெடிய கல்வி ஆய்வு பயணத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. பல லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெருமை சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. இன்றும் பல நிதிச் சிக்கல்களுக்கு இடையே பல்கலைக்கழகத்தின் கல்விப் பணி தொடர்கிறது. வருமான வரித்துறை வங்கிக் கணக்கை முடக்குகிற அளவிற்குப் பல்கலைக்கழகம் வருமான வரி ஏய்ப்பு  செய்யவில்லை. வருமான வரிச் சட்டப் பிரிவின்கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தை ஒரு முதலாளித்துவ நிறுவனமாக வரைமுறை செய்து, கடந்த ஆண்டுகளில் பல முறை வருமான வரியைக் கட்டச் சொல்லித் தாக்கீதுகளை (நோட்டீஸ்) வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. 

இதற்கான உரியப் பதில்களைப் பல்கலைக்கழகம் அளித்துள்ளது. இது போதாது என்று பல லட்சம் ரூபாய் சரக்கு சேவை வரியையும் கட்ட தாக்கீதுகள் மத்திய அரசால் அனுப்பப்படுகின்றன” என்கிறார் முன்னாள் பொருளியல்துறை தலைவர் நாகநாதன்.

இந்த நிலையில் பேராசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் இணைந்து அவசர குழு ஒன்றை அமைத்துள்ளனர். இதன் மூலம் இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கலந்து ஆலோசிக்கப்படவிருக்கிறது. மின்சார வாரியத்திடம் இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்டிருப்பதாக, பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால்தான் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“பல்கலைக்கழக வங்கிக் கணக்குகள் செயல்படாததால் நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் அனைத்து தரப்பட்ட ஊழியர்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும். இத்தகைய சூழலில் பல்கலைக்கழகத்தின் மின் கட்டணத்திற்கு ரூபாய் 80 லட்சம் கட்ட வேண்டி இருப்பதாகவும், கட்டவில்லை என்றால் மின்சார வசதி துண்டிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விடுதி மாணவர்களுக்கான தினசரி உணவு செலவுகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உள்ளிட்டவை மாணவர்களுக்குக் கிடைப்பதில் பெரும் பாதிப்புகள் உண்டாகும்.

மாணவர்கள் நலன் கருதி வருமான வரித்துறை தரப்பில் முடக்கப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளை விடுவிக்குமாறும், தமிழ்நாடு அரசு சென்னை பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்கத் துரித நடவடிக்கை எடுக்குமாறும், இந்த வங்கி முடக்கத்திற்குக் காரணமாக மெத்தனப் போக்கோடு செயல்பட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு… அவர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்திய மாணவர் சங்க சென்னை மாவட்டத் தலைவர் அருண் குமார் வேண்டுகோள் விடுத்தார்.

எதுவாயினும் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இதில் தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே, பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *