`இந்துக்களில் 95 சதவிகிதம் மக்களுக்கு நாங்கள்தான் எல்லா உரிமைகளையும் வாங்கிக் கொடுத்தோம்!’ – ஆ.ராசா | dmk mp A Raja speech at madurai

Img 20240218 Wa0021.jpg

இந்து என்று நீங்கள் சொல்லக்கூடிய 90 முதல் 95 சதவிகிதம் மக்களுக்கு நாங்கள்தான் எல்லா உரிமைகளையும் வாங்கிக் கொடுத்தோம். பல நூற்றாண்டுகளாக இந்துக்களில் பல்வேறு சாதியினரை படிக்க விடாமல் வைத்திருந்தனர். பலருக்கும் சொத்து இருந்தது, விவசாயம் என எல்லாம் இருந்தது. ஆனால், படிக்க வராதே என்று சொன்னது ஆரியம். படிக்க வைத்தது திராவிடம்.

நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக கொடுக்கப்பட்ட பதிலில், ராமர் கோயில் கட்டப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம். ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே என கூறிக்கொள்ளும் குஜராத்தில் 24 சதவிகிதம், கேரளாவில் 11 சதவிகிதம், தமிழகத்தில் 12 சதவிகிதம் உள்ளது. பொதுவுடைமை இயக்கமும் திராவிட இயக்கமும் இருந்த மண்ணில்தான் 11 முதல் 13 சதவிகித வறுமைகோட்டிற்கு கீழே மக்கள் உள்ளார்கள்.

பொதுக்கூட்டத்தில்

பொதுக்கூட்டத்தில்

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பணம் கொடுங்கள் என்று நாங்கள் கேட்டால், அதற்கு நிதியமைச்சரோ, மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு நாங்கள் நிதி வழங்குகிறோம், இதுவரைக்கும் ரூ.1,500 கோடி கொடுத்திருக்கிறோம் எனக் கூறுகிறார்.

மாநில பேரிடர் நிவாரண நிதி என்பது, நாம் அனுப்பும் வரியில் ஒரு சதவிகிதத்தை தனியாக ஒதுக்கி வைப்பதுதான். ஆனால், பெருவெள்ளத்தின்போது மாநில அரசால் உதவ முடியாத நிலையில், உதவ வேண்டியதுதான் தேசிய பேரிடர் மேலாண்மை நிதி. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து எவ்வளவு கொடுத்தீர்கள் என கேட்டால், அதுதான் இது, இதுதான் அது என வாழைப்பழ காமெடிபோல பேசுகிறார் நிர்மலா சீதாராமன்.

மத்தியில் இருப்பது ஓர் அரசாங்கமா… நீதித்துறையை மதிப்பதில்லை, தேர்தல் கமிஷனை மதிப்பதில்லை, நாடாளுமன்றத்தை மதிப்பதில்லை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படக்கூடிய எந்த சட்டத்தையாவது நீங்கள் மதித்திருக்கிறீர்களா… எத்தனை மாநிலத்தில் தேர்தலில் தோற்று போய் இவர்கள் ஆட்சியை அமர்ந்திருக்கிறார்கள் தெரியுமா?

அஜித் பவார் மீது 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை நெருக்கடி கொடுத்தன. நெருக்கடியை தாங்க முடியாமல் பா.ஜ.க-வில் சேர்கிறார். அடுத்த நாள் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது.

வாஷிங் பவுடர் விளம்பரத்தில் அழுக்கு துணியை உள்ளே விட்டால் வெளியில் வெள்ளையாக வரும். அதுபோல எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும், பா.ஜ.க என்ற மிஷினுக்குள் சென்றுவிட்டால், வெளியில் வெள்ளையாக வரலாம். இப்படி ஒரு மோடி மஸ்தான் வித்தையை கண்டுபிடித்த வித்தைக்காரர்தான் நரேந்திர மோடி.

பல பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களை உருவாக்கித் தந்தவர் தலைவர் கலைஞர். நீங்கள் பிரதமராக வர வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்டபோது, என் உயரம் எனக்கு தெரியும் என பதிலளித்தார் கலைஞர்.

இந்தியாவை ஆள்வதற்கும் பாசிசத்தை வீழ்த்துவதற்கும் தகுதியான தலைவர்தான் இது போன்ற கூட்டத்தை முன்னெடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் கால் நூற்றாண்டு காலம் பதவியில் இருந்து விட்டேன், பெரிய உயரத்திற்கும் சென்றிருக்கிறேன், பெரிய இறக்கத்திற்கும் சென்ற வந்திருக்கிறேன். இந்த ஆட்சியில் நடக்கும் அயோக்கியத்தனம், அவலம்போல இதுவரை பார்த்ததில்லை.

சிறுபான்மையினரையும் பெரும்பான்மையினரையும் பிரித்து வைத்து அதன் காரணமாக பத்தாண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை ஆட்சியில் இருக்கலாம் என நினைக்கும் மதவாதிகளை, ஊழல்வாதிகளை, அரசியல் சட்டத்தை சிதைக்கின்ற இந்த மகா பாவிகளை வீட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரே தகுதி உடைய தலைவராக ஸ்டாலின் உள்ளார். அவர் கருத்தான பாசிசத்தை வீழ்த்தி டெல்லியிலே புதிய வரலாறை படைப்போம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *