“விவசாயிகளுக்குப் பலனளிக்கும் திட்டங்களையே செயல்படுத்தி வருகிறோம்!" – பிரதமர் மோடி

Screenshot 2024 02 16 15 32 33.png

பாஜக கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 150 சதவிகிதமாக்கப்படும் என்ற வாக்குறுதிகளை அறிவித்துதான் ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், அவை நிறைவேற்றப்படாததால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவருதல், விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் பிப்ரவரி 13 முதல் டெல்லி முற்றுகை போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

டெல்லி போலீஸாரும் தயாராக எல்லைகளில் கடுமையான தடுப்புகளுடன், துப்பாக்கி ஏந்தி நிற்கின்றனர். இன்னொருபக்கம், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாய அமைப்புகளிடம் மத்திய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. அடுத்த பேச்சுவார்த்தை பிப்ரவரி 18-ம் தேதி நடக்கவிருக்கிறது. அதேசமயம், சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் இன்று பாரத் பந்த்தில் ஈடுபட்டிருக்கின்றன.

இவ்வாறு, நான்கு நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுவரும் சூழலில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு செயல்படுத்திவருவதாகப் பிரதமர் மோடி இன்று தெரிவித்திருக்கிறார். ஹரியானாவின் ரேவாரியில் இன்று மத்திய அரசின் நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் முன் உரையாற்றிய மோடி, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என இந்த நாடு விரும்பியது. இன்று முழு நாடும், அயோத்தியில் ராமர் கோயிலைப் பார்க்கிறது.

பிரதமர் மோடி

ராமர் கற்பனை என்று நினைத்துக்கொண்டு, அவருக்கு கோயில் கோயில் கட்டப்படுவதை விரும்பாமலிருந்த காங்கிரஸ் கட்சியினரும் இப்போது ஜெய் சியா ராம் என்று முழங்கத் தொடங்கியிருக்கின்றனர். அதேபோல, விவசாயிகளுக்கு நாங்கள் மோடி உத்தரவாதம் கொடுத்தோம். முன்பெல்லாம் வங்கிகள் விவசாயிகளுக்குக் கடன் கொடுக்கவில்லை. பின்னர், அதற்கு நாங்கள் உத்தரவாதம் கொடுத்தோம். இவ்வாறு, மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்குப் பலனளிக்கும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *