பில்கிஸ் பானோ வழக்கு: குஜராத் அரசுக்கு எதிரான வார்த்தைகளை திரும்ப பெறக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு!

Bilkis Bano.jpg

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ் பானோ என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானோ வழக்கு விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கோர்ட் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. ஆயுள் தண்டனை பெற்று சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 11 குற்றவாளிகளை கடந்த 2022-ம் ஆண்டு தண்டனை முடியும் முன்பே குஜராத் அரசு சிறையில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து பில்கிஸ் பானோ சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

பில்கிஸ் பானோ

அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி குஜராத் அரசு குற்றவாளிகளை விடுவிக்கப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. குற்றவாளிகள் அனைவரும் 2 வாரத்தில் சிறையில் சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். அதோடு, இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் குஜராத் அரசுக்கு எதிராக கடுமையான சில கருத்துகளை தெரிவித்து இருந்தது. குற்றவாளிகளை விடுவிக்கும் விவகாரத்தில் குஜராத் அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும், வழக்கு விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடந்திருப்பதால், மும்பை நீதிமன்றம்தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இக்கருத்தை கோர்ட் குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரி குஜராத் அரசு சார்பாக சுப்ரீம் கோர்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பில்கிஸ் பானோ வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மாநில அரசு குற்றவாளிகளுடன் இணைந்து செயல்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருப்பது நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்துகள் மாநில அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், எனவே இவ்வழக்கில் நீதிபதிகள் குஜராத் அரசுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெறவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பில்கிஸ் பானோ

தண்டனையை குறைக்கவேண்டும் என்று கோரி குற்றவாளிகள் கொடுத்த மனுவின் மீது, 1992-ம் ஆண்டு சட்டத்தின் படி, நன்னடத்தையின் அடிப்படையில்தான் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் குஜராத் அரசு தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *