`பாஜக-வினரை தூங்க விடாமல் செய்கிறது திமுக; யார் தீவிரவாதிகள், உழவர்களா?!' – ஸ்டாலின் காட்டம்

Whatsapp Image 2024 01 26 At 20 42 18.jpeg

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “நாடாளும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளில் ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சியின் மாண்பை முற்றிலுமாகச் சிதைத்துள்ள நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு மூலமாகத் தமிழ்நாட்டை மட்டுமன்றி, இந்தியாவைக் காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க-வுக்கு இருக்கிறது.

அமித் ஷா, மோடி,

தி.மு.க ஒரு மாநிலக் கட்சிதானே என்று எள்ளி நகையாட நினைத்தவர்கள், ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும்போதும் தி.மு.க.வை விமர்சித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு தி.மு.க-வின் கொள்கை பலம் அச்சப்பட வைத்திருக்கிறது. மதவெறி அரசியல் நடத்தும் பா.ஜ.க-வை கருத்தியல்ரீதியாகவும் செயல்பாட்டுரீதியாகவும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநிலக் கட்சியான தி.மு.க-வுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் உண்டு என்பதால்தான், என்பதால்தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவர்கள் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம். அவர்களுக்கே அப்படியென்றால், அந்தக் கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு இரவுமே தூக்கம் தொலைத்த இரவுகள்தான்.

அரசியல் கருத்துகளை – கொள்கை முரண்பாடுகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ள வலுவோ – நேர்மையோ இல்லாத ஒன்றிய பா.ஜ.க அரசு, தன் வசப்படுத்தியுள்ள அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை இவற்றை ஏவி, தனக்கு எதிரான இயக்கங்களை நசுக்கிவிடலாம் என நினைத்து, வன்மத்துடன் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சட்ட நெருக்கடிகளை ஏற்படுத்துவதுடன், சட்டமன்றத்திலும் தனது கைப்பாவையாக உள்ள ஆளுநர்களை வைத்து நெருக்கடி தரலாம் என நினைத்து, அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

ஆளுநர் ரவி

சுருக்கமாகச் சொன்னால், ஹிட்லர் போன்ற சர்வாதிகாரத்தன்மையுடன் செயல்பட்டு, தங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பறிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கான உறுதியான குரலில் முதலில் முழங்கும் மாநிலம், தமிழ்நாடுதான். 1975-ல் நெருக்கடிகளை எதிர்கொண்டு, ஆட்சியையே விலையாகக் கொடுத்து, ஜனநாயகத்தைக் காத்தது தி.மு.க.

நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், ஜனநாயக உரிமைகளைக் காக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் நாடெங்கும் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்கான முதல்படியாக பிப்ரவரி 16, 17, 18 ஆகிய நாள்களில், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு – புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமை முழக்கம் ஒலிக்க இருக்கிறது.

மோடி

2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பது இந்தியாவில் இனி தேர்தல் முறை என ஒன்று இருக்குமா, மக்களின் வாக்குரிமை மதிக்கப்படுமா, ஜனநாயகம் நீடிக்குமா, அரசியல்சட்டம் நிலைக்குமா, பன்முகத்தன்மையும் மாநில உரிமைகளும் உயிர்த்திருக்குமா என்பதற்கான இறுதி விடையைத் தரக்கூடியக் களமாகும். இந்தியத் தலைநகர் டெல்லியிலும், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் போர் மேகங்கள் சூழந்தது போன்ற பதற்றத்தை ஒன்றிய ஆட்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் தடுப்பு வேலிகள், வாகனங்களைத் தடுக்கும் ஆணிப் படுக்கைகள், எல்லாத் திசையிலும் பாதுகாப்புக் காவலர்கள், கடுமையான பரிசோதனை நடவடிக்கைகள். டெல்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்… ஒன்றிய பா.ஜ.க அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது.

Farmers Protest | டெல்லி விவசாயிகள் போராட்டம்

மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய உழவர்களின் வயிற்றிலடித்த ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து ஏறத்தாழ ஓராண்டு காலம் இடைவிடாது போராடினார்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள். தி.மு.க அவர்கள் பக்கம் உறுதியாக நின்றது. அசைந்து கொடுக்க மறுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, உழவர்களை ஒடுக்க நினைத்தது. அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரித்தது. அப்போதும் உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முடியாத காரணத்தால், 3 வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது.

ஆனால், உழவர்களின் வாழ்வு செழிப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவில்லை. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெறவில்லை. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகரில் போராட்டம் நடத்த வரும் உழவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள்-ஆணி படுக்கைகளைப் பாதையில் விரித்துப் போட்டிருக்கும் கொடூரமும் நிகழ்ந்துள்ளது. இதில் யார் தீவிரவாதிகள்… உழவர்களா? அரசாங்கமா?

எடப்பாடி பழனிசாமி, மோடி

பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகள் அனைத்திற்கும் துணை நின்று ஆதரித்த அ.தி.மு.க-தான் இப்போது பா.ஜ.க சொல்லிக் கொடுத்ததுபோலவே கூட்டணி இல்லை என்று பசப்பிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அளவிலும் பா.ஜ.க செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்ததுதான் அ.தி.மு.க. மக்களின் எதிரிகளான இந்த இரண்டு கட்சிகளையும் அம்பலப்படுத்த வேண்டிய கடமை உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *