Farmers protest: `MSP, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி ஃபார்முலா…' – மோடி அரசை வலியுறுத்தும் ஒவைசி!

Screenshot 2024 02 13 16 50 13.png

வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா 2020, விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 ஆகிய மூன்று வேளாண் சட்டங்களை, 2020-ல் பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. அதற்கெதிராக டெல்லியில் ஓராண்டாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த பிறகு, 2021-ல் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற்றது.

டெல்லியை நெருங்கிய பஞ்சாப் விவசாயிகள்

ஆனாலும், விவசாயிகள் வலியுறுத்தும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் இயற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை பா.ஜ.க அரசு புறக்கணித்து வருகிறது. இத்தனைக்கும், 2014-ல் தேர்தல் சமயத்தில் `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 150 சதவிகிதமாக்குவோம்’ என்று வாக்குறுதியளித்த மோடி, ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்றவில்லை எனப் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் பிப்ரவரி 13-ல் டெல்லியை முற்றுகையிடுவது என முடிவுசெய்தனர்.

உடனே, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் குழுவிடம் மத்திய அமைச்சர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு எதிர்பார்த்த விடை கிடைக்காததால், இன்று காலை டெல்லியை நோக்கி, 6 மாதத்துக்குத் தேவையான உணவு, தானியம் மற்றும் டீசல் கையிருப்புடன் டிராக்டர்களில் கிளம்பினர்.

விவசாயிகள் போராட்டம்

ஆனால், பஞ்சாப் ஹரியானா எல்லைகளில் ஆணி பலகை, முள் வளையம் கொண்ட இரும்பு தடுப்புகள், கான்கிரீட் தடுப்புகளுடன் போலீஸார் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், விவசாயிகள் தொடர்ந்து தடுப்புகளைத் தகர்த்து முன்னேறி வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தேர்தலில் அதற்கான பலனை மோடி பெறுவார் என்று AIMIM தலைவர் ஒவைசி கூறியிருக்கிறார். இது குறித்து ஊடகத்திடம் பேசியிருக்கும் ஒவைசி, “இது மோடி அரசின் தோல்வி. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்றியிருக்க வேண்டும். அதோடு, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி ஃபார்முலாவை அமல்படுத்த வேண்டும் என்பது அவர்களின் மற்றொரு கோரிக்கை.

ஒவைசி

ஆனால், அரசு ஏன் நேரத்தை வீணடிக்கிறது. மேலும், அண்டை நாட்டிலிருந்து ராணுவம் வருவதுபோல அவர்களைத் தடுக்கிறீர்கள் (பாஜக). விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக பிரதமர் ஏற்க வேண்டும். இல்லையென்றால், தேர்தல் நெருங்குவதால் அதற்கான பலனைப் பெறுவார்” என்று தெரிவித்தார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி ஃபார்முலா என்பது, யு.பி.ஏ ஆட்சியில் விவசாயிகள் நலனுக்காக கடந்த ஆண்டு மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த பரிந்துரைகள். அதில், விளைபொருள்களுக்கு அதன் உற்பத்தி செலவுடன் 50 சதவிகிதம் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை முன்வைக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *