ரேஷன் கார்டிலிருந்து குடும்ப உறுப்பினர்கள் பெயர் நீக்கப்படுமா… அரசு சொல்வது என்ன?

Ration .jpg

தமிழ்நாட்டில் இரண்டாயிரம் கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகதாரர்கள் இருக்கிறார்கள். நியாயவிலைக் கடைகளில் பொருள் வாங்கும் போது, பயோமெட்ரிக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதாவது குடும்ப அட்டையில் பெயர் உள்ள ஒருவர் கைரேகை வைத்தால்தான் நியாயவிலைக் கடைகளில் அந்தக் குடும்பத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட மாதாந்தர பொருள்களை வாங்க முடியும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் என நேரில் வந்து வாங்க முடியாதவர்கள் உரிய விண்ணப்பம் அளித்து தெரிந்த நபர்கள் மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் .

Ration Card | ரேஷன் கார்டு

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று தங்களின் விரல் ரேகையைப் பதிவு செய்து தங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும். அப்படி பிப்ரவரி மாத இறுதிக்குள் பெயரை பதிவு செய்யாவிட்டால், குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனால் மக்கள் பதற்றம் அடையத்தொடங்கினர்.

இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013- ன் அடிப்படையில் பொது விநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கெனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்கான முயற்சி இது. மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல்ரேகை அடிப்படையில் சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியைச் செய்ய அறிவுறுத்தபட்டு இருக்கிறது. பயனாளிகள் ஓய்வாக இருக்கும்போது அல்லது பொருள்கள் வாங்க நியாயவிலைக் கடைக்கு வரும்போது கைவிரல் ரேகைப் பதிவு செய்யபட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை புதுப்பிக்கப்படுகிறது. இந்தப் பணியானது 2023- அக்டோபரில் இருந்து நடைபெற்று வருகிறது.

ration card

இதுவரை 63 சதவிகிதம் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அட்டைதாரர்களுக்கு சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப அவர்களின் நியாயவிலைக் கடைகளிலேயே தங்கள் தரவை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இயலவில்லை எனில், இதற்கென தனி முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். தேவைப்படின் வீட்டிற்கே சென்று புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படாது, பதிவு செய்யாதவர்கள் பெயர்கள் நீக்கப்படாது. குடும்ப அட்டையைப் புதுப்பிக்க குடும்ப அட்டைதாரர்கள் வெள்ளைத்தாளில் சுயவிவரங்கள் எழுதித்தர வேண்டும் என அரசு எந்த உத்தரவும், விதிமுறையும் இதுவரை இயற்றவில்லை. மக்கள் ஏமாறவோ, பயப்படவோ வேண்டாம்” என  தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *