மீண்டும் வெடித்தது விவசாயிகள் போராட்டம்… தேர்தல் நேரத்தில் பாஜக-வுக்கு தலைவலியா?!

Ap24044343736838.jpg

மத்திய பா.ஜ.க அரசு, விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், விவசாயிகள் தொடங்கியிருக்கும் இந்தப் போராட்டம், பா.ஜ.க-வுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. நாடாளுமன்றத்திலோ, விவசாயிகள் தரப்பிடமோ விவாதிக்காமல், தன்னிச்சையாக அந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. ஆனால், ‘மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாக மூன்று சட்டங்களும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன’ என்று குற்றம்சாட்டிய விவசாயிகள், அந்த மூன்று சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தின.

மத்திய பா.ஜ.க அரசோ, மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறத் தயாராக இல்லை. எனவே, மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் ஒருங்கிணைந்து போராடத் தொடங்கினர். அந்தப் போராட்டத்துக்கு பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பெருமளவில் பெரும் ஆதரவு கிடைத்தது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 32 விவசாயிகள் சங்கங்களுடன் ஹரியானாவின் விவசாயிகள் சங்கங்களும் இணைந்து சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி உருவாக்கப்பட்டது. பிறகு, ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்துடன் நவம்பர் 26-ம் தேதி தலைநகர் டெல்லியை நோக்கி அணி அணியாக விவசாயிகள் டிராக்டர்களில் விரைந்தனர்.

அதே காட்சிகள் தற்போது மீண்டும் அரங்கேறிவருகின்றன. 2020-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. ஆனாலும், அந்தப் போராட்டத்தின்போது வழங்கிய வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டும் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு 200 விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

டிராக்டர் டயர்களைப் பஞ்சாரக்க செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லிக்கு விரைகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில், விவசாயிகள் போராட்டம் நடத்துவதை விரும்பாத ஆட்சியாளர்கள், போராட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.

டெல்லி எல்லையையொட்டிய அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், ஹிசார் ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. எல்லைப் பகுதியில் முக்கியச் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

டெல்லி எல்லைகளில், விவசாயிகள் போராட்டம்

போராட்டத்தை ஒடுக்குவதற்கான வேலையில் டெல்லி போலீஸார் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்கள். டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் எல்லைகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

விவசாயிகள் தரப்பினருடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா ஆகியோர் நேற்று மாலை (பிப். 12) நடத்தி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே, திட்டமிட்டபடி விவசாயிகள் இன்று (பிப். 13) டெல்லி சலோ போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்த நிலையில், பஞ்சாப் – ஹரியானா எல்லையில் துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். டிராக்டர்களில் மட்டுமின்றி, ஏராளமான விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் டெல்லியை நோக்கி செல்கிறார்கள். அவர்களில் பலரை, போலீஸார் கைது செய்ததுடன், அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அமித் ஷா, மோடி

பஞ்சாப் – ஹரியானா எல்லையில், சாலைகளை மறித்து இரும்புத்தடுப்புகளை போலீஸார் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த இரும்புத்தடுப்புகளை விவசாயிகள் அகற்றியிருக்கிறார்கள். அதனால், விவசாயிகளை நோக்கி ஹரியானா போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதால், அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. ஆனாலும், டெல்லியை நோக்கி பேரணியாகச் செல்வது என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நான்கு ஆண்டுகள் இருந்த நிலையிலேயே, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறியது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் தற்போதைய சூழலில் வெடித்திருக்கும் விவசாயிகளின் 2.0 போராட்டத்தை எதிர்கொள்வது பா.ஜ.க அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *