தேனி நகராட்சி: திமுக பெண் தலைவருக்கு எதிராக திமுக துணைத் தலைவர், கவுன்சிலர்கள் போர்க்கொடி!

Img 20240212 Wa0020.jpg

தேனி – அல்லிநகரம் நகராட்சியில், நகர்மன்ற உறுப்பினர்களின் சாதாரணக் கூட்டம் இன்று ஆணையர் ஜஹாங்கிர் பாஷா தலைமையில் நடந்தது. நகர்மன்றத் தலைவரான தி.மு.க-வைச் சேர்ந்த ரேணுப்பிரியா முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உள்ளிட்ட 31 கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் என 88 பொருள்கள்மீது தீர்மானம் நிறைவேற்றப்படவிருந்தது.

நகரமன்றத் தலைவர் ரேணுப்ரியா

ஆனால் தீர்மானங்கள் தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்களிடம் எந்தவித கருத்துகளும் கேட்கவில்லை என்றும், அது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வம் கூறினார். இதையடுத்து கூட்டத்தில் நிறைவேற்றபடவிருந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று, நகர்மன்ற துணைத் தலைவராக உள்ள தி.மு.க-வைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட தி.மு.க, காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினர்கள் என 14 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு வாக்கு எண்ணிக்கை நடத்திய ஆணையர், போதிய ஆதரவு இருப்பதாகக் கூறினார். ஆனால் ஆணையர் சரிவர வாக்கு எண்ணிக்கை நடத்தவில்லை என்றும், மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனக் கூறி, துணைத் தலைவர் உள்ளிட்ட எதிர்ப்பு கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்திய ஆணையர், எதிர்ப்புக்கு போதிய ஆதரவு இல்லாததால் ஒத்திவைப்பு தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் நகர்மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட எதிர்தரப்பு கவுன்சிலர்கள், ஆணையர் மற்றும் நகர்மன்றத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நகர் மன்ற துணைத் தலைவர் செல்வம்

இதன் காரணமாக கூட்டரங்கில் சலசலப்பு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து, தீர்மானம் நிறைவேற்ற போதிய ஆதரவு இருப்பதாகக் கூறி தீர்மானங்கள் அனைத்தும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, கூட்டத்தை பாதியில் முடித்து விட்டு நகர்மன்றத் தலைவர், ஆணையர் ஆகியோர் வெளியே சென்றனர். அவர்களுடன் அ.தி.மு.க, அ.ம.மு.க மற்றும் தி.மு.க உள்ளிட்ட ஆதரவு கவுன்சிலர்களும் வெளியேறினர். 

இதையடுத்து ஆணையர் மற்றும் நகர்மன்றத் தலைவர் ஆகியோரை கண்டித்து நகர்மன்ற துணைத் தலைவர் செல்வம் தலைமையிலான எதிர்ப்பு கவுன்சிலர்களான தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 14 பேர் கூட்டரங்கில் சிறிது நேரம் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது தொடர்பாக நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, அவர்களும் கலைந்து சென்றனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வம்

தி.மு.க-வைச் சேர்ந்த பெண், நகர்மன்றத் தலைவராக உள்ள தேனி நகராட்சியில், துணைத் தலைவராக உள்ள தி.மு.க-வைச் சேர்ந்தவரும் அவருடன் மேலும் சில தி.மு.க, காங்கிரஸ் கவுன்சிலர்களும் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *