`சாவர்க்கர், கோட்ஸே வழியில் வந்தவர்கள்' – அப்பாவு; பாதியில் வெளியேறிய ஆளுநர் | சட்டசபை ஹைலைட்ஸ்

1506ba42 Bb24 4fd0 A4a8 D21b87de5410.jpeg

தமிழ்நாடு சட்டமன்றத்தில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்கியது. ஆனால், கடந்த ஆண்டு அரசு தயாரித்த உரையில் சிலவற்றை வாசிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ரவி, இந்த முறை முழு உரையையுமே வாசிக்காமல் புறக்கணித்தார். குறிப்பாக, “தேசிய கீதத்தை மதிக்க வேண்டும் என்பது என்னுடைய தொடர் கோரிக்கை. அதேபோல கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதும் என்னுடைய அறிவுறுத்தல். ஆனால், தொடர்ந்து அது புறக்கணிக்கப்படுகிறது. உரையில் இருக்கும் தரவுகள், உண்மை அடிப்படையிலும், கள நிலவரத்தின் அடிப்படையிலும் முரணாக இருப்பதால், இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குற்றச்சாட்டை முன்வைத்துப் புறக்கணித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

அவரைத் தொடர்ந்து, உரையின் தமிழாக்கத்தை முழுமையாக வாசித்தார் சபாநாயகர் அப்பாவு. அதைத் தொடர்ந்து மேலும் பேசிய அப்பாவு, “ஆளுநர் ஒப்புதல் அளித்த உரையை அவரே குறைவாக வாசித்தார். இருந்தாலும் அதை குறையாகக் கூற விரும்பவில்லை. முதலில் தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும் என்று கருத்து சொல்லியிருந்தார். அனைவருக்கும் நிறைய கருத்துகள் இருக்கிறது. அவற்றையெல்லாம் பேசுவது மரபல்ல.

எத்தனையோ கருத்து, கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் ஆளுநரை மாண்போடு நடத்துவதுதான் தமிழ்நாடு அரசின் பண்பு. இவ்வளவு பெரிய மழை, வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு பைசாகூட நிதி தரவில்லை (மத்திய அரசு). பல லட்சம் கோடி ரூபாய் பி.எம் கேர் ஃபண்டில் (PM Care Fund) இருக்கிறது. இந்திய மக்கள் கணக்கு கேட்க முடியாத இந்த ஃபண்டிலிருந்தாவது ரூ.50,000 கோடி பெற்றுத்தரலாம். மேலும், சாவர்க்கர், கோட்ஸே வழியில் வந்தவர்களுக்கு சற்றும் குறைந்தவர்களல்ல தமிழ்நாட்டு சட்டமன்றத்தினர்” என்று பேசி முடித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றம்

அவரைத் தொடர்ந்து மூத்த அமைச்சர் துரைமுருகன் எழுந்து ஆளுநர் உரை மீதான தீர்மானத்தை வாசிக்க ஆரம்பித்தபோது, ஆளுநர் தனது நாற்காலியிலிருந்து எழுந்து கிளம்பினார். அப்போது, “தேசிய கீதம் இனிமேல்தான் பாடுவோம்” என ஆளுநரை நோக்கி அப்பாவு கூறினார். தொடர்ந்து தீர்மானத்தை வாசித்த துரைமுருகன், “2024-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தவிர்க்கப்பட்ட ஆளுநர் உரை, இந்த மாண்பமை மன்றத்துக்கு வழங்கப்பட்டபடியே அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்” என்றார்.

அப்பாவு

அதைத் தொடர்ந்து பேசிய அப்பாவு, “தீர்மானத்தை மறுப்போரே இல்லை என்று கருதுகிறேன். தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. ஆளுநர் உரையின், தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும். வேறு எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது” என்று கூறினார். இறுதியாக, தேசிய கீதம் குறித்து ஆளுநர் கூறிய கருத்து பற்றி பேசிய அப்பாவு, “ இந்தப் பேரவை எப்போதும் மரபுகளை மதித்துப் பின்பற்றி வருகிறது. அந்த வகையில் ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்வுக்குப் பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்டு வருகிறது” என்று கூறி முடித்ததும், தேசிய கீதம் பாடப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *