`இதற்கு முன் இதுபோல் நடந்ததில்லை; கட்சியை தேர்தல் கமிஷன் பறித்துக்கொண்டது'- சரத் பவார் குற்றச்சாட்டு

2nhdf4r8 Sharad Pawar Ani 625x300 25 August 23.webp.png

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைத் தொடர்ந்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னம் அதிருப்தி தலைவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேயிக்கு வேறு பெயர்கள் மற்றும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சரத் பவார் புனேயில் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கட்சியை தொடங்கியவர்களிடமிருந்து தேர்தல் கமிஷன் கட்சியை பிடுங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு இது போன்று நடந்ததில்லை. கட்சி மற்றும் சின்னத்தைப் பிடுங்கி வேறு ஒருவரிடம் கொடுத்திருக்கிறது.

இது போன்று இதற்கு முன்பு நடந்ததில்லை. ஆனால் அதை தேர்தல் கமிஷன் செய்திருக்கிறது. தேர்தல் கமிஷன் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்வோம். இதற்கு முன்பு வேறு சின்னங்களில் போட்டியிட்டிருக்கிறேன். மக்கள் சின்னத்தை பெரிதாகப் பார்ப்பதில்லை. தேர்தல் கமிஷனின் முடிவுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

பா.ஜ.க, அமலாக்கப் பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. கடந்த 2014-23-ம் ஆண்டில் அமலாக்கப் பிரிவு 6 ஆயிரம் வழக்குகளை பதிவுசெய்திருக்கிறது. ஆனால், அதில் வெறும் 25 வழக்குகள்தான் உண்மையானது. அதிலும் இரண்டு வழக்குகளில் மட்டும்தான் தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்காக அமலாக்கப் பிரிவு 404 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் அமலாக்கப் பிரிவு 147 அரசியல் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

சரத் பவார்

ஆனால், அதில் 85 சதவிகிதம் பேர் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆவர். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, 121 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவுசெய்துள்ளது. அதில் ஒருவர்கூட பா.ஜ.க தலைவர் கிடையாது. பா.ஜ.க தலைவர்களுக்கு எதிரான விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

தங்களது கட்சியின் புதிய சின்னம் குறித்து ஓரிரு நாள்களில் முடிவுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *