`ஆளுநர் ரவி சட்டமன்றத்திலிருந்து வெளியேறியது ஏன்?' – ஆளுநர் மாளிகை தரும் விளக்கமென்ன?

Gridart 20240212 161231406.jpg

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில், அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரைக்கு முன்பும், கூட்டத்தின் முடிவிலும் தேசிய இசைக்கப்பட்ட வேண்டும் என்று, தான் அறிவுறுத்தியது நிராகரிக்கப்பட்டதாகவும், உரையில் இருக்கும் தரவுகள் உண்மைக்கு முரணாக இருப்பதாகவும் கூறி, உரையை வாசிக்காமல் புறக்கணித்தது, பேசுபொருளாகியிருக்கிறது.

சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி

மேலும், சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்து முடித்தவுடன், ஆளுநர் ரவி அவையிலிருந்து பாதிலேயே வெளியேறினார்.

சட்டப்பேரவையில் அப்பாவு, ஆளுநர் ரவி

பின்னர் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, “அரசு ஒப்புதல் அளித்த உரைதான் வாசிப்புக்கு வந்தது. `நீங்கள்தான் ஆளுநர் உரையைத் தயார்செய்து தந்தீர்கள். இந்தப் பகுதியை எல்லாம் நீக்கச் சொன்னேன். அதை நீங்கள் நீக்கவில்லை. அதனால், கடைசி வரியை வாசித்துச் செல்கிறேன்’ என்று சொல்வதற்குப் பதில், `இதில் எழுதியிருப்பது எதுவும் பிடிக்கவில்லை’ என்று ஆளுநர் கூறுவது எப்படி சரி?” என்று கேள்வியெழுப்பினார். இந்த நிலையில், சட்டமன்றத்தில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்திருக்கிறது.

இது தொடர்பாக ஆளுநர் மளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பிப்ரவரி 9-ம் தேதி அரசிடமிருந்து ஆளுநர் உரை பெறப்பட்டது. அதில், உண்மைக்கு அப்பாற்பட்ட தவறான உரிமைகோரல்களுடன் ஏராளமான பத்திகள் இருந்தன. அதனால், சில அறிவுறுத்தல்களைக் கோப்புகளாக அரசுக்கு ஆளுநர் அனுப்பினார். அதில், `தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும். இது தொடர்பாகக் கடந்த காலங்களில் முதலமைச்சருக்கும், சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. ஆளுநர் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். மாறாக, தவறான அறிக்கைகள், அப்பட்டமான அரசியல் கருத்துகளை வெளியிடுவதாக இருக்கக் கூடாது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆளுநர் மாளிகை அறிக்கை

ஆனால், ஆளுநரின் அறிவுரையை அரசு புறக்கணித்தது. இந்த நிலையில், அவையில் இன்று அந்த உரையை வாசித்த ஆளுநர், `உரை தவறான கூற்றுக்களுடன் பல பத்திகளைக் கொண்டிருப்பதால் அதை வாசிக்க முடியாது. அதை வாசித்தால், அது அரசியல் சாசன கேலிக்கூத்தாக இருக்கும். மக்களின் நலனுக்காக இந்த அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன்’ என்று கூறி முடித்தார்.

சட்டப்பேரவை | வெளியேறிய ஆளுநர் ரவி

பிறகு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை ஆளுநர் அமர்ந்திருந்தார். சபாநாயகர் அதை வாசித்து முடித்ததும், பட்டியலிடப்பட்டிருந்ததன்படி தேசிய கீதத்துக்காக ஆளுநர் எழுந்தார். ஆனால், சபாநாயகர் அப்போது ஆளுநரை `கோட்சே வழிவந்தவர்’ எனக் கூறி, தனது அநாகரிகமான செயலால் அவையின் மாண்பைக் குறைத்தார். அதனால், ஆளுநர் தன்னுடைய பதவி மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு அவையிலிருந்து வெளியேறினார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *