“அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான பிரச்னை… சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை!"- எடப்பாடி பழனிசாமி

1707729106 1506ba42 Bb24 4fd0 A4a8 D21b87de5410.jpeg

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை, ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் புறக்கணித்ததும், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவையிலிருந்து வெளியேறியதும் விவாதப்பொருளாகியிருக்கிறது.

அப்பாவு – ஆளுநர் ரவி – தமிழ்நாடு சட்டமன்றம்

இந்த நிலையில், `இது ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்னை’ என்றும், `இந்த உரை உப்பு சப்பில்லாத உரை’ என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “இந்த ஆண்டு ஆளுநர் உரையில், கடந்து ஆண்டைப்போலவே எந்த விதமான குறிப்பும் இல்லை. இந்த அரசின் கொள்கைகளை விளக்கும் உரையாக இது இல்லை. மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்பதை நிரூபிக்கும் வகையில்தான் ஆளுநர் உரை இருக்கிறது. விடியா அரசின் இந்தாண்டுக்கான ஆளுநர் உரை என்பது உப்பு சப்பில்லாத, ஊசிப்போன உணவுப் பண்டம்.

தனது கோரிக்கையை நிறைவேற்றாததால், உரையைப் படிக்கவில்லை என்று ஆளுநர் தெரிவித்திருக்கிறார். இது அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலுள்ள பிரச்னை. ஆளுநருக்கும், அரசுக்கும், சபாநாயகருக்கும் என்ன பிரச்னை என்று அவர்களிடம்தான் கேட்கவேண்டும். மரபை மாற்றுகிறார்களா, மரபை கடைப்பிடிக்கிறார்களா என்பதை அவர்களிடம் கேட்டால்தான் தெரியும். நம் சபாநாயகர் பல மரபுகளைக் கடைப்பிடிக்கவில்லை. சட்டமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருப்பதும் மரபுதான். இதைப் பலமுறை கோடிட்டு காட்டியிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு காரணத்தைச் சொல்கிறார். இப்போது மரபை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவரே கூறியிருக்கிறார். இனியாவது சபாநாயகர் மரபை கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசியவர், “சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அவரே ஒருதலைபட்சமாகச் செயல்படும்போது என்ன செய்யவேண்டும் என்று மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்” என்று கூறினார். மேலும், தேசிய கீதம் பாடப்படும் முன்பே ஆளுநர் வெளியேறியது குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஆளுநரிடம்நான் கேட்க முடியும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *