“என்னை கருவேப்பிலையாக பயன்படுத்தினர்!" – காங்கிரஸில் 48 ஆண்டுகள்… விலகிய முன்னாள் அமைச்சர்!

Gf O Ysw0aamasa.jfif .png

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளான சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே பிளவு ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சி மட்டும் தான் தாக்குப்பிடித்து நிற்கிறது. இப்போது அந்தக் கட்சியும் ஆட்டம் காண ஆரம்பித்து இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மும்பை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மிலிந்த் தியோரா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் சேர்ந்தார். அடுத்து வரும் 27-ம் தேதி ராஜ்ய சபை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க பா.ஜ.க. காய்நகர்த்தி வருகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க.வால் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும்.

பாபா சித்திக்

ஆனால் 4-வது வேட்பாளரையும் நிறுத்த பா.ஜ.க தயாராகி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ அஜித் பவார் கட்சியில் சேர்ந்துவிட்டார். மும்பையில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அஜித் பவார் அணிக்கு இழுக்கும் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக மும்பை பாந்த்ராவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

அவர் தற்போது தனது எம்.எல்.ஏ மகனுடன் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகு பாபா சித்திக் அளித்த பேட்டியில், ”காங்கிரஸ் கட்சியில் என்னை கறிவேப்பிலை போன்று பயன்படுத்திவிட்டு தூக்கிப்போட்டனர். சில முடிவுகள் வேதனையளிக்கும். ஆனால் முடிவுகளை எடுத்துத்தான் ஆகவேண்டும். சில நாள்களுக்கு முன்பு பிரபுல் பட்டேலை சந்தித்து பேசினேன். அதனை தொடர்ந்து அஜித் பவார் தலைமையில் செயல்படுவது என்று முடிவு செய்துவிட்டேன்” என்று குறிப்பிட்டார்.

பாபா சித்திக் மும்பை காங்கிரஸ் கட்சியில் 48 ஆண்டுகளாக இருக்கிறார். அவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. பாபா சித்திக் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் ரம்ஜான் விருந்து வைப்பார். இதில் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம். முஸ்லிம்கள் மத்தியில் பிரபலமான பாபா சித்திக், அஜித் பவார் அணிக்கு தாவி இருப்பதால் மேலும் பலர் தாவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அஜித் பவார் அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *