`அதிமுக கிடப்பில் போட்ட திட்டங்களை, திமுக செய்து முடிக்கிறது!' – கனிமொழி எம்.பி

Kanimozi.jpeg

தி.மு.க நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கனிமொழி எம்.பி தலைமையில், கோவையில் நேற்றைய தினம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், தொழில்துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை, கனிமொழி கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

`கோவை மாவட்டத்துக்கான நலத்திட்டங்கள் மிகவும் குறைவாகவும் மந்த நிலையிலும் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து உங்கள் கருத்தென்ன?’

“ஒன்றிய அரசாங்கம் தமிழக அரசிடம் பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் தென் மாநிலங்களுக்குக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. இதனால் இருக்கக்கூடிய சில பிரச்னைகளால், கோவைக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாமே தவிர… கோவையை தி.மு.க புறக்கணிக்கவில்லை.

நாளைகூட (10-02-2024) விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூபாய் 790 கோடி‌‌ மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மேலும் பல தொழிற்சாலைகளைக் கோவைக்குக் கொண்டு வர, முதலமைச்சர் பல திட்டங்களை மேற்கொண்டிருக்கிறார். மேலும் மெட்ரோவுக்காக ஒன்பதாயிரம் கோடி ரூபாய், சாலைக்காக முந்நூறு கோடி ரூபாய், குடிநீருக்காக 790 கோடி ரூபாய், மேற்கு புறவழிச் சாலைக்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

கனிமொழி

`இவையனைத்தும் அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள். தி.மு.க ஆட்சியில் புதிதாக எந்த திட்டங்களும் தொடங்கப்படவில்லையே?’

“அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் பல கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த திட்டங்களை தி.மு.க தான் செயல்படுத்துகிறது.”

`தி.மு.க ஆட்சியில் புதிதாக எந்த மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்படவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறாரே?’

“கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில், இந்தியாவிலேயே அதிகமாக அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கும் சில மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு மாறியது. ஆனால் தற்போது நமது மண்ணை சேர்ந்த குழந்தைகளே அந்தக் கல்லூரிகளில் படிக்க முடியாத திட்டமான நீட் போன்றவை கொண்டுவரப்பட்டது. இது குறித்து ஏன் அவர்கள் பேசவில்லை?” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *