`மோடி ஓபிசி அல்ல!’ – சாதிவாரி கணக்கெடுப்புக் குரலெழுப்பும் ராகுல் காந்தி… சாத்தியப்படுமா?!

Untitled Design 51 .png

`பிரதமர் மோடி ஓ.பி.சி பிரிவைச் சார்ந்தவர் அல்ல; அவர் ஒருபோதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தமாட்டார்’ என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியிருப்பது, பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

ஒடிசா மாநிலத்தில் மேற்கொண்டுவரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம், பொதுமக்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி, “பிரதமர் மோடி தான் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் (ஓ.பி.சி) சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் என மக்களிடம் பொய் சொல்லி வருகிறார். மக்களை தவறாக வழிநடத்திவருகிறார். உண்மையில், மோடி பொதுப் பிரிவைச் சேர்ந்தவர். குஜராத் மாநிலத்தில் தெலி என்ற சாதிப்பிரிவில் பிறந்தவர்.

இந்தப் பிரிவானது கடந்த 2000-ம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சியின்போதுதான் ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கப்பட்டது. ஆகவே மோடி பிறந்தது ஓ.பி.சி பிரிவில் அல்ல! ஆகவே அவர் தனது வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதி வழங்க மாட்டார். அவர் ஓ.பி.சி-களுடன் கை குலுக்கியது இல்லை; ஆனால் பணக்காரர்களைக் கட்டித் தழுவுவார்!” என கடுமையாகக் குற்றம்சாட்டினார். இந்தப் பேச்சு இந்திய அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

பிரதமர் மோடி

அதுமட்டுமல்லாமல், ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “மோடி பிறப்பால் ஓ.பி.சி இல்லை, அவர் ஒரு `பேப்பர் ஓபிசி’. மோடி பிறந்து 50 ஆண்டுகள் வரை அவர் ஓ.பி.சியே கிடையாது! இந்தத் தகவலை உறுதிப்படுத்திய பா.ஜ.க அரசுக்கு மிக்க நன்றி!” என பதிவிட்டு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டிருந்த `மோடியின் ஓ.பி.சி அடையாளம் அக்டோபர் 27, 1999-லேயே அங்கீகரிக்கப்பட்டுவிட்டது’ என்ற செய்திப் படத்தையும் சேர்த்து பகிர்ந்திருக்கிறார்.

பாரத் ஜோடோ – யாத்திரையில் ராகுல் காந்தி

மேலும் ராகுல் காந்தியின் மற்றொரு பதிவில், “பிரதமர் மோடி ஒரு நாளுக்கு 3 முறை உடை மாற்றிக்கொள்கிறார்; 9 லட்சம் ரூபாய் மதிப்பில் உடைகளை அணிந்துகொள்கிறார்; சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேனாவில் எழுதுகிறார். மோடியின் மொழியில் ஓ.பி.சி என்றால் `ஒன்லி பிசினஸ் கிளாஸ்’ (OBC – Only Business Class) என்றுதான் பொருள். அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்கமாட்டார். பேப்பர் மற்றும் தேர்தலுக்கான ஓ.பி.சிக்கள் அவர்களின் நாள்களை எண்ணிக்கொண்டிருக்கட்டும், நாங்கள் வெற்றிபெற்று சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்துவோம்!” எனத் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.

சாதி வாரிக் கணக்கெடுப்ப பற்றி ராகுல் காந்தி பேசிவருவது முதன்முறை அல்ல! ஏற்கெனவே, ராகுல் காந்தி “நாங்கள் சமூக நீதியை விரும்புகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். இதனால் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை முறையாக கணக்கிடப்பட்டு, அவர்கள் பயன்பெறுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், காங்கிரஸ் ஆட்சியிலுள்ள கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி – பாரத் ஜோடோ – சாதிவாரி கணக்கெடுப்பு

ராகுல் காந்தியின் `சாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதி’ சமூகநீதி பேசும் அரசியல் இயக்கங்கள், எஸ்.சி/எஸ்.டி., ஓ.பி.சி மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அவை வாக்குகளாக மாறுமா… காங்கிரஸ் கட்சிக்கு பலன் தருமா என்பதை வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்தான் தெரியப்படுத்தும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *